இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தம் கடந்த 2009ஆம் ஆண்டு முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. இறுதி யுத்தத்தின் போது பாரிய மனித படுகொலைகள் இடம்பெற்றுள்ளதாக இலங்கை மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இதன் காரணமாக 2010ஆம் ஆண்டு ஐரோப்பிய ஒன்றியம் இலங்கைக்கு ஜீ.எஸ்.பி வரி சலுகையினை இடை நிறுத்தியது. இந்நிலையில் கடந்த ஆண்டு இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது.
இதனையடுத்து கடந்த ஜூலை மாதம் ஜீ.எஸ்.பி வரி சலுகையினை மீள வழங்க வேண்டும் என கோரி இலங்கை அரசாங்கம் ஐரோப்பிய ஒன்றியத்திடம் கோரிக்கை விடுத்திருந்தது.
எனினும், இலங்கை அரசின் கோரிக்கையினை ஏற்று ஜீ.எஸ்.பி வரி சலுகை வழங்க கூடாது என புலம் பெயர் அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.
இலங்கையில் நல்லாட்சி இடம்பெறுவதாக தெரிவிக்கின்ற போதிலும் வடக்கிலுள்ள இராணுவத்தினர் வெளியேற்றப்படாமலும், அரசியல் கைதிகள் தொடர்ந்தும் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
எனவே, இலங்கைக்கு ஜீ.எஸ்.பி வரி சலுகை வழங்க கூடாது என வலியுறுத்தி இன்றைய தினம் ஐரோப்பிய ஒன்றியத்துடன் புலம் பெயர் அமைப்புகள் சந்திப்பு ஒன்றை நடத்தியுள்ளன.
இதன் மூலம் இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் யுத்தக் குற்றச்சாட்டுகளுக்கு புலம் பெயர் அமைப்புகள் நீதி கோரி நிற்கின்றமை குறிப்பிடத்தக்கது.