ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைக் கொலை செய்யும் சதித் திட்டம் ஒன்றுடன் தொடர்பிருக்கலாம் என்ற சந்தேகத்தில், முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி மீது தாக்குதல் நடத்திய முன்னாள் கடற்படைச் சிப்பாய் விஜிதமுனி ரோகண தொடர்பாக விசாரணைகள் நடத்தப்படுவதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.
வரும் ஜனவரி 26ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கொலை செய்யப்படுவார் என, விஜிதமுனி ரோகண, தனது பேஸ்புக் மற்றும் ஏனைய சமூக வலைத்தளங்களிலும் காணொளிகளை பதிவேற்றியுள்ளார்.
மைத்திரிபால சிறிசேனவின் மரணத்துக்குப் பின்னர் நடக்கும் ஜனாதிபதி தேர்தலில், கோத்தாபய ராஜபக்ச, தமிழ், முஸ்லிம்களின் வாக்குகள் இன்றியே வெற்றி பெறுவார் என்றும், பிரதமராக மஹிந்த ராஜபக்ச பதவியேற்பார் எனவும் இவர் ஆரூடம் வெளியிட்டுள்ளார்.
இவரது இந்த ஜோதிட எதிர்வுகூறல் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
ஊடகத்துறை அமைச்சின் செயலர் நிமல் போபகே நேற்று கொழும்பில் செய்தியாளர்களிடம் தகவல் வெளியிடுகையில், “விஜிதமுனியி இந்தக் கருத்துக்களை அதிகாரிகள் அலட்சியம் செய்ய முடியாது. இவர் வரும் ஜனவரி 26ஆம் திகதி ஜனாதிபதி கொலை செய்யப்படுவார் என கூறியிருக்கிறார்.
ஜனாதிபதியை படுகொலை செய்யும் பரந்துபட்ட திட்டம் ஒன்றின் அங்கமாக இந்தப் பரப்புரை அமைந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுவதால், பொலிஸ் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என்று குறிப்பிட்டார்.