ஜனவரியிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையம் பூட்டு!

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஓடுபாதை திருத்தப்பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதனால் எதிர்வரும், மூன்று மாதங்களுக்கு விமான நிலையம் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் ஜனவரி 6ஆம் திகதியில் இருந்து ஏப்ரல் மாதம் 6ஆம் திகதி வரையிலான மூன்று மாதங்களுக்கு தினமும் காலை 8 மணியில் இருந்து பிற்பகல் 4.30 மணி வரை விமான நிலையம் மூடப்படவுள்ளது.

கடந்த மூன்று தசாப்தங்களாக கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு கிட்டத்தட்ட 950,000 க்கும் அதிகமான விமானங்கள் வந்து சென்றுள்ளன.

1980ஆம் ஆண்டு நடுப்பகுதியில், அப்போதைய தேவைக்கமைய வடிவமைக்கப்பட்ட ஓடுபாதையே இப்போதும் பயன்பாட்டில் உள்ளது.

குறித்த மூன்று தசாப்தங்களாக ஒரு ஓடுபாதை மாத்திரமே உள்ளதாகவும், அந்தக் காலப் பகுதியில் பாரிய புனரமைப்பு பணிகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை என குறிப்பிடப்படுகின்றது.

இதனால், ஓடுபாதை தற்போதைய தேவைக்கமைய புனரமைக்கப்பட்டு விரிவாக்கப்படவுள்ளது.

எனவே புனரமைப்பு பணிகளின் போது விமான நிலையம் மூடப்படவுள்ளது. குறித்த காலப்பகுதியில் விமான நிலையத்தின் பணிகள் மட்டுப்படுத்தப்படவுள்ளன.

இதனால், கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக சேவைகளை மேற்கொள்ளும் அனைத்து விமான சேவை நிறுவனங்களையும், பிற்பகல் 4.30 மணிக்கும், காலை 8 மணிக்கும் இடையில் சேவைகளை மாற்றியமைக்குமாறு ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அனைத்து நகர்வுகளும் வருடத்திற்கு ஒன்பது மில்லியன் பயணிகளின் தேவைக்கமைய கையாளுவதற்காகவே மேற்கொள்ளப்படுகின்றது.

மேலும் வருடத்திற்கு வரும் 9 மில்லியன் பயணிகளை 15 மில்லியான அதிகரிப்பதற்காக முயற்சிகளும் இதன் ஊடாக மேற்கொள்ளப்படுவதாக கூறப்படுகின்றது.