நபரொருவரின் பேஸ்புக் மூலம் தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தப்பட்டுள்ளது பற்றி அரசியல்வாதியொருவர் புகார் அளித்துள்ளதாக, ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.
இது விடயமான புகார் ஒன்றைத் தான் ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் திங்கட்கிழமை (19) அளித்துள்ளதாக ஏறாவூர் நகர சபையின் முன்னாள் உறுப்பினரும், ஓய்வு பெற்ற ஆசியரும், முன்னாள் அமைச்சர் பஷீர் சேகுதாவூத்தின் இணைப்பாளருமான ஜே.எம். முஸ்தபா தெரிவித்தார்.
இந்த விவகாரம் குறித்து மேலும் தெரிவித்த அவர், நபரொருவர் எனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் தனது பேஸ்புக்கில் விடயங்களைப் பதிவேற்றம் செய்துள்ளார்.
இதனால் என்னை இழிவுபடுத்தும் அபிப்பிராயங்கள் பதியப்படுகின்றன.இந்த விடயம் எனது கடந்த கால அரசியல் மற்றும் சமூகசேவைப் பணிகளைத் தரக்குறைவாக மதிப்பிடுவதாகவும் எனக்கும் எனது குடும்பத்துக்கும் அவமானத்தை ஏற்படுத்துவதாகவும் உள்ளன.
எனவே, இது குறித்து விசாரிக்குமாறும் சம்பந்தப்பட்ட நபருக்கெதிராக நடவடிக்கை எடுக்குமாறும் எனக்கேற்பட்ட மானபங்கத்துக்கு இழப்பீடு தருமாறும் கேட்டிருக்கின்றேன் என்றார்.
இச்சம்பவம் குறித்து விசாரணை செய்து வருவதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.