ரிசர்வ் வங்கியிடம் போதுமான அளவு ரூபாய் நோட்டுகள் கையிருப்பு உள்ளது: அருண் ஜெட்லி தகவல்

வங்கிகளிடம் போதுமான அளவுக்கு ரூபாய் நோட்டுகள் கையிருப்பு உள்ளது என்று மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி கூறினார்.

ரூ.1,000 மற்றும் ரூ.500 நோட்டுகள் செல்லாது என பிரதமர் நரேந்திர மோடி கடந்த மாதம் 8-ந் தேதி வெளியிட்ட அதிரடி அறிவிப்பால், நாட்டில் ரூபாய் நோட்டுகளுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

பொதுமக்களுக்கு பணம் வழங்க முடியாத நிலையில் பெரும்பாலான ஏ.டி.எம். மையங்கள் பூட்டு போட்டு மூடப்பட்டுள்ளன. அவ்வப்போது திறக்கிற ஒரு சில ஏ.டி.எம். மையங்களும் சில மணி நேரமே இயங்குகிற நிலையில், பணம் எடுப்பதற்காக மக்கள் நீண்ட வரிசைகளில் காத்துக்கிடக்கிற நிலைமை தொடர்ந்து கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி, டெல்லியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது,

ரூபாய் நோட்டு ஒழிப்பு நடவடிக்கையில் ரிசர்வ் வங்கி முழுமையான தயார் நிலையில் இருந்தது. வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி பணம் வினியோகம் செய்யாத நாள் என ஒரு நாள்கூட கிடையாது. ரிசர்வ் வங்கியிடம் குறிப்பிட்ட அளவுக்கு ரூபாய் நோட்டுகள் கையிருப்பு இருந்தது.

ரிசர்வ் வங்கி முன்கூட்டியே ரூபாய் நோட்டுகள் கையிருப்பை பராமரித்து வந்தது. அத்துடன் அச்சிட்டும் இருப்பு வைக்கப்பட்டது.

இன்றைக்கும் கூட ரிசர்வ் வங்கியிடம் 30-ந் தேதி வரை மட்டும் அல்ல, அதையும் தாண்டியும் வினியோகிக்க தேவையான அளவுக்கு ரூபாய் நோட்டுகள் இருக்கின்றன.

புழக்கத்தில் இருக்கிற ரூபாய் நோட்டுகளின் அளவு பற்றி மிக துல்லியமாக கூற வேண்டுமானால், அதை 30-ந் தேதிக்கு பின்னர் தான் பகிரங்கமாக கூற முடியும்.

அச்சிடப்படும் ரூபாய் நோட்டுகள், அஞ்சல் அலுவலகங்களுக்கு போகின்றன. அங்கிருந்து வங்கிகளுக்கு அனுப்பப்படுகின்றன. பின்னர் பண அறைக்கு செல்கின்றன. எனவே இரண்டுமுறை கணக்கிடவும் வாய்ப்பு இருப்பதால், இப்போதே துல்லியமாக கூற முடியாது. எனவே புழக்கத்தில் எவ்வளவு ரூபாய் நோட்டுகள் உள்ளன என்பதை யூகித்து கூற விரும்பவில்லை.

ரொக்கமில்லா டிஜிட்டல் பண பரிமாற்றம், கிரெடிட் அட்டைகள், டெபிட் அட்டைகள் பண பரிமாற்றம் குறிப்பிடத்தக்க அளவுக்கு உயர்ந்துள்ளது. சிலவற்றில் 300 சதவீத அளவுக்கு ஏற்றம் இருக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

செல்லாது என அறிவிக்கப்பட்ட பழைய ரூபாய் நோட்டுகள் டெபாசிட்டில் திடீர் கட்டுப்பாடுகள் கொண்டு வந்திருப்பது பற்றி நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு அருண் ஜெட்லி, “செல்லாது என அறிவிக்கப்பட்ட ரூபாய் நோட்டுகளை ஒரு முறையில் வங்கிக்கு சென்று டெபாசிட் செய்தால் சந்தேகம் வராது. ஒருவர் திரும்பத்திரும்ப செல்கிறபோது, சந்தேகம் எழுகிறது. ஒருவருக்கு தினந்தோறும் பழைய ரூபாய் நோட்டுகள் கிடைப்பது எப்படி என்கிற சந்தேகம் ஏற்படுகிறது. நீண்ட காலத்துக்கு விதிவிலக்குகள் இருக்கிறபோது, பழைய நோட்டுகள் வருவதற்கான வாய்ப்பு இருந்து கொண்டே இருக்கும். விதிவிலக்குகளை முடிவுக்கு கொண்டு வருகிறபோது, பழைய நோட்டுகள் இருந்தால் ஒரே முறையில் வங்கிக்கு கொண்டு வந்து டெபாசிட் செய்து விடலாம்” என பதில் அளித்தார்.

இவ்வாறு அவர் கூறினார்.