ஜெயலலிதா சொத்துக்களை அரசு ஏற்க வேண்டும் என்ற வழக்கை தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவு!

தமிழக முதல்-அமைச்சராகவும், அ.தி.மு.க. பொதுச்செயலாளரகவும் பதவி வகித்து வந்த ஜெயலலிதா கடந்த 5-ந் தேதி காலமானார். மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் ஏராளமான சொத்துகள் உள்ளன.

தெலுங்கானா மாநிலத்தில் ஜெயலலிதாவின் பெயரில் உள்ள அனைத்து சொத்துகளையும் அம்மாநில அரசு ஏற்க வேண்டும் என கூறி கைரிப் கைடு என்ற அமைப்பின் சார்பில் ரிட் வழக்கு ஐதராபாத் ஐகோர்ட்டில் தொடரப்பட்டது. ஜெயலலிதாவுக்கு வாரிசுகள் இல்லாததால் ஐதராபாத்தில் அவருக்கு சொந்தமான சொத்துக்களை தெலுங்கானா அரசு ஏற்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.

தலைமை நீதிபதி பொறுப்பு வகிக்கும் ரமேஷ் ரங்கநாதன் தலைமையிலான அமர்வு முன்பு இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், மனுதாரருக்கு கடும் கண்டனம் தெரிவித்ததுடன் ரூ.1 லட்சம் அபராதமும் விதித்தும் உத்தரவிட்டனர்.

ஜெயலலிதாவுக்கு அண்ணன் மகன் மற்றும் அண்ணன் மகள் உள்ளனர். அப்படி இருக்கும் பட்சத்தில் அவருக்கு வாரிசு இல்லை என்று கூறி எப்படி வழக்கு தொடர முடிந்தது என்றும் நீதிபதிகள் வழக்கு விசாரணையின் போது தெரிவித்தனர்.

மேலும், “இது நீதிமன்ற நடைமுறைக்கு தவறான விஷயம் ஆகும். மனுதாரர் செய்த தவறுக்கு அபராதம் கட்டியே ஆக வேண்டு. இதனை வேறு யாரும் உதாரணமாக எடுத்துக் கொள்ள கூடாது” என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

இதனையடுத்து, ஜெயலலிதாவுக்கு சொந்தமான சொத்துக்களை அரசு ஏற்க வேண்டும் என தொடரப்பட்ட இந்த வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.