நாய்களின் தந்தை: 735 தெரு நாய்களுக்கு அடைக்கலம் கொடுத்த இந்திய மென்பொறியாளர்!

கர்நாடக மாநிலம் பெங்களூர் அருகேயுள்ள பண்ணை ஒன்றில் சுமார் 735 தெருநாய்களை மென்பொறியாளர் ராகேஷ் சுக்லா வளர்த்து வருகிறார். இதற்காக மூன்றரை ஏக்கர் நிலத்தில் பண்ணை வீடு ஒன்றையும் அவர் கட்டியிருக்கிறார்.

ராகேஷின் இந்த சேவை காரணமாக அவரை அனைவரும் ‘நாய்களின் தந்தை’ என்று அழைக்கின்றனர். இதுகுறித்து ராகேஷ் சுக்லா கூறுகையில் “நான் டெல்லி மற்றும் அமெரிக்காவில் பணி புரிந்தேன். பிறகு பெங்களூரில் எனது சொந்த நிறுவனத்தை ஆரம்பித்து நடத்தி வருகிறேன். எனது வாழ்வில் எவ்வளவு பணம் வந்தாலும் எனக்கு மகிழ்ச்சி கிடைக்கவில்லை. பிறகு ஒருநாள் காவ்யா(நாய்) எனது வாழ்வில் வந்தாள்.

அப்போது முதல் எனது வாழ்க்கை முறை மாறியது. அடுத்ததாக லக்கி வந்து சேர்ந்தது. அதன் பின்னர் தெருநாய்களை எங்கு கண்டாலும் அழைத்து வந்து வளர்க்க ஆரம்பித்தேன். எனது வீட்டில் இடம் போதவில்லை. அதனால் இந்த பண்ணையை வாங்கி அதை நாய்களுக்கான இடமாக மாற்றினேன். பண்ணையில் நாய்கள் ஓடி விளையாட இடம், குளிக்க நீச்சல் குளம், பாதுகாப்புக்கு வேலி ஆகியவற்றை அமைத்தேன்.

நாய்களைக் கவனித்துக்கொள்ள மருத்துவர்கள், சமைக்க மற்றும் நாய்களைக் கவனித்துக் கொள்ள பணியாளர்கள் உட்பட மொத்தம் 10 பேர் உள்ளனர். ஒரு நாளைக்கு 45135 ரூபாய் செலவாகிறது. இதில் 93% நன்கொடையாக கிடைக்கிறது” என்றார்.