மோடி சட்டையை மாற்றுவதை போல் ‘ரிசர்வ் வங்கி’ விதிமுறைகளை மாற்றுகிறது: ராகுல்காந்தி!

பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் நரேந்திர மோடி கடந்த நவம்பர் மாதம் 8-ந்தேதி அதிரடியாக அறிவித்தார்.

கருப்பு பணத்தை ஒழிக்கும் விதமாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதை தொடர்ந்து மக்கள் தங்களிடம் உள்ள பழைய 500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் டெபாசிட் செய்து வருகிறார்கள்.

இதனிடையே, அறிவிப்பு வெளியான நவம்பர் 8-ம்தேதி முதல் நேற்று வரை நாள்தோறும் ரிசர்வ் வங்கியும், மத்திய அரசும் பல்வேறு புதிய புதிய அறிவிப்புகளை வெளியிட்டுக் கொண்டே இருக்கிறது.

இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தனது சட்டையை மாற்றுவது போல், பண ரத்து நடவடிக்கையில் ரிசர்வ் வங்கி விதிமுறைகளை மாற்றி வருகிறது என்று ராகுல்காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார். தனது டுவிட்டர் பக்கத்தில் இந்த செய்தியை அவர் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய ராகுல்காந்தி, “டிசம்பர் 30-ம்தேதி பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் டெபாசிட் செய்யலாம் என்று பிரதமர் மோடி உறுதி அளித்தார். ஆனால் நேற்று மீண்டும் விதிமுறை மாற்றப்பட்டுள்ளது. மோடியின் வார்த்தைக்கு வலுவில்லை” என்று கூறினார்.