பொங்கல் அடுத்த மாதம் கொண்டாடபட உள்ள நிலையில் கருப்பட்டியின் விலை திடீரென அதிகரித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இயற்கை உணவு பொருட்களில் கருப்பட்டி மருத்துவ குணம் கொண்டது. வறண்ட நிலப்பரப்புகளில் வளரும் தன்மை கொண்ட பனை மரத்தில் இருந்து கிடைக்கப்பெறும் பதநீரை நன்கு காய்ச்சி பக்குவப்படுத்தி கருப்பட்டி தயாரிக்கப்படுகிறது. தூத்துக்குடி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கருப்பட்டி தயாரிக்கப்பட்டு வந்தாலும் உடன்குடி பகுதியில் தயாரிக்கப்படும் கருப்பட்டிக்கு மார்க்கெட்டில் தனி மவுசு உண்டு.
இதில் மிகுந்த சுவை இருப்பதே இதற்கு காரணம் ஆகும். தமிழர் திருநாள் பொங்கல் பண்டிகை அடுத்த மாதம் கொண்டாடப்பட இருக்கிறது. இந்நிலையில் திடீரென கருப்பட்டி விலை உயர்ந்துள்ளது. தற்போது பதநீர் சீசன் முற்றிலும் முடிவடைந்து விட்டது.
இதனால் பதநீர் தேவையான அளவு கிடைக்கவில்லை. பதநீர் கிடைக்காததால் கருப்பட்டி உற்பத்தி வெகுவாக குறைந்து விட்டது. உடன்குடியில் கிலோ ரூ.260க்கும், 10 கிலோ கொண்ட கொட்டான் ரூ.2600க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த திடீர் விலை உயர்வு பொதுமக்கள் குறிப்பாக பெண்களை அச்சப்பட வைத்துள்ளது.