ஜெர்மனியில் கிறிஸ்துமஸ் பண்டிகை களை கட்டி உள்ள நிலையில், வரலாற்று சிறப்புமிக்க கைசர் வில்கெட் நினைவு தேவாலயம் அருகே உள்ள மார்க்கெட் பகுதியில் மக்கள் கூட்டத்திற்கு லாரி புகுந்து 12 பேர் பரிதாபமாக கொல்லப்பட்டனர். பலர் படுகாயம் அடைந்தனர்.
இது தொடர்பாக ஜெர்மனி உள்துறை மந்திரி கூறுகையில், “இந்த சம்பவத்தில் தொடர்புடையதாக சந்தேகத்தின் பேரில் பாகிஸ்தானை சேர்ந்த 23 வயது வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் ஜெர்மனியில் அகதியாக தஞ்சம் புகுந்தவர்” என்றார்.
இது குறித்து பேசிய அந்நாட்டு அதிபர் ஏஞ்சலா மெர்கல், ”இந்த நேரத்தில் இது ஒரு தீவிரவாத தாக்குதலாக தான் இருக்க வேண்டும் என்று நாம் உறுதியாக கருத வேண்டும். பாதுகாப்பிற்காக ஜெர்மனி நாட்டிற்குள் தஞ்சம் தேடி வந்த ஒருவரால் இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருப்பது மிகவும் வித்தியாசமானது என்று கருதுகிறேன்” என்று கூறினார்.
இந்த தாக்குதலால் ஜெர்மனியின் அடுத்த அதிபர் தேர்தலில் ஏஞ்சலா மார்கெல் போட்டியிடுவதற்கு சிக்கல் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
முன்னதாக, கடந்த ஜூலை 14-ந்தேதி நைஸ் நகரில் நடந்த சுதந்திர தின கொண்டாட்டத்தின் போது கூட்டத்தில் லாரி ஏற்றி 86 பேர் கொல்லப்பட்டனர். அதில் ஐ.எஸ். மற்றும் அல்கொய்தா தீவிரவாதிகள் ஈடுபட்டனர்.