இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இதில் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 75 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி 18 போட்டிகளில் தோல்வியை சந்திக்காமல் வீறுநடை போட்டி சென்று கொண்டிருக்கிறது.
இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திர பேட்ஸ்மேன் ஆன விராட் கோலி கடந்த 2015-ம் ஆண்டு இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் பதவியை ஏற்றுக் கொண்டார். ஆஸ்திரேலியா தொடரின்போது டோனி பாதிலேயே ஓய்வு பெற்றதால் கோலி கேப்டன் ஆனார்.
ஆஸ்திரேலியா தொடருக்குப்பின் இலங்கை தொடர்தான் கோலி தலைமை ஏற்ற பிறகு இந்திய அணிக்கு முழுமையான தொடர். மூன்று போட்டிகளை அந்த தொடரின் முதல் போட்டி காலேயில் நடைபெற்றது இதில் இந்தியா தோல்வியடைந்தது.
அதன்பின் இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியது. பின்னர், தென்ஆப்பிரிக்காவிற்கு எதிராக இந்தியாவில் நடைபெற்ற நான்கு போட்டிகள் கொண்ட தொடரில் 3-0 என இந்தியா வெற்றி பெற்றது. ஒரு போட்டி மழைக்காரணமாக டிராவில் முடிந்தது.
அதன்பின் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிராக நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. இதில் இரண்டில் வெற்றி பெற்று தொடரை 2-0 எனக்கைப்பற்றியது. இரண்டு போட்டிகள் டிராவில் முடிந்தது.
இங்கிலாந்து தொடருக்கு முன் நியூசிலாந்து அணி இந்தியா வந்திருந்தது. அந்த தொடரை இந்தியா 3-0 எனக் கைப்பற்றியது. தற்போது இங்கிலாந்துக்கு எதிரான தொடரை இந்தியா 4-0 எனக் கைப்பற்றியது. ராஜ்கோட்டில் நடைபெற்ற முதல் டெஸ்ட் டிரா ஆனது.
தொடர்ச்சியாக ஐந்து தொடர்களை வென்றுள்ள இந்தியா 2015 ஆகஸ்ட் மாதம் காலேயில் நடைபெற்ற டெஸ்டில் 63 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்த பின், அதற்குப்பின் தோல்வியை சந்தித்ததே கிடையாது.
மும்பை வெற்றியின் போது 17 போட்டிகளில் தோல்விகளை சந்தித்ததில்லை என்ற சாதனையை சமன் செய்த விராட் கோலி, தற்போதைய வெற்றியின் மூலம் 18 போட்டிகளில் தோல்விகளை சந்திக்காத கேப்டன் என்ற பெருமையை பெற்றுள்ளார்.