இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடர் இன்றுடன் முடிவடைந்தது. இதில் இந்தியா 4-0 எனத் தொடரை கைப்பற்றியுள்ளது.
சென்னையில் இன்று நடைபெற்ற கடைசி டெஸ்ட் டிராவில்தான் முடியும் என அனைவரும் எதிர்பார்த்தனர். அதற்கேற்பதான் இங்கிலாந்து அணியின் பேட்டிங்கும் இருந்தது. ஆனால் ஜடேஜா அவர்களின் கனவை தகர்த்து விட்டார். 7 விக்கெட்டுக்கள் வீழ்த்தி அவர்களை இன்னிங்ஸ் தோல்வி அடைய வைத்துவிட்டார்.
தொடரை இழந்தது குறித்து இங்கிலாந்து அணியின் கேப்டன் அலஸ்டைர் குக் கூறுகையில் ‘‘எந்த சாக்குபோக்கும் சொல்வதற்கில்லை. இந்தியா மிகவும் சிறந்த அணி. இந்த தொடரின் வெற்றிக்கு அவர்கள் தகுதியானவர்கள். இன்றைய ஐந்தாவது நாள் ஆடுகளம் பந்து அதிக அளவில் டர்ன் ஆகும் நிலைக்கு மாறியது. மதிய உணவு இடைவேளை நாங்கள் நல்ல நிலையில் இருந்தது.
ஆனால், அது போட்டியை டிராவிற்கு கொண்டு செல்லும் அளவிற்கு கொணடு செல்ல முடியவில்லை. நாங்கள் முக்கியமான பல வாய்ப்புகளை வீணடித்தோம். இதனால் எங்களை இந்திய வீரர்கள் தண்டித்து விட்டார்கள். இதனால் அவர்களை வேகத்தை கட்டுப்படுத்துவது கடினமாகிவிட்டது.
அனைத்து பெருமையும் விராட் கோலிக்கே. அவர்கள் எங்களை போட்டியில் இருந்தே வெளியேற்றி விட்டனர். பல கேட்ச்களையும், முக்கியமான வாய்ப்புகளையும் தவற விட்டது எங்களை தொடரை இழக்கும் நிலைக்கு கொண்டு சென்றுவிட்டது. போதுமான அளவிற்கு ரன்களும் அடிக்கவில்லை. விக்கெட்டுக்களையும் வீழ்த்த முடியவில்லை’’ என்றார்.