ஜூனியர் உலககோப்பை ஆக்கி அணியில் இடம்பெற்ற பஞ்சாப் வீரர்களுக்கு தலா ரூ.25 லட்சம் பரிசு தொகையாக வழங்கப்படும் என பஞ்சாப் மாநில துணை முதல்-மந்திரி சுக்பீர் சிங் பாதல் அறிவித்துள்ளார்.
16 அணிகள் இடையிலான 11-வது ஜூனியர் உலக கோப்பை ஆக்கி போட்டி உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் நடந்து வந்தது. இதில் சாம்பியன் கோப்பைக்கான இறுதி ஆட்டத்தில் இந்தியாவும், பெல்ஜியமும் கோதாவில் இறங்கின. இறுதியில் இந்திய அணி 2-1 என்ற கோல் கணக்கில் பெல்ஜியத்தை தோற்கடித்து 2-வது முறையாக உலக சாம்பியன் மகுடத்தை சூடியது.
இந்திய வீரர்கள் ஒவ்வொருவருக்கும் தலா ரூ.5 லட்சமும், பயிற்சி உதவியாளர்களுக்கு ரூ.2 லட்சமும் ஊக்கத்தொகையாக வழங்கப்படும் என்று ஆக்கி இந்தியா அறிவித்துள்ள நிலையில், ஜூனியர் உலக கோப்பை ஆக்கி அணியில் இடம்பிடித்த பஞ்சாப் மாநில ஆக்கி வீரர்களுக்கு தலா ரூ.25 லட்சம் ரூபாய் பரிசு தொகையாக வழங்கப்படும் என பஞ்சாப் மாநில துணை முதல்வர் சுக்பீர் சிங் பாதல் அறிவித்துள்ளார்.
ஜூனியர் உலக கோப்பை ஆக்கியில் பெல்ஜியத்தை தோற்கடித்து இந்திய அணி 15 ஆண்டுகளுக்கு பிறகு சாம்பியன் கோப்பையை வென்றது குறிப்பிடத்தக்கது.