பைபிள் மாந்தர்கள்: பேதுருவின் மாமியார்!

‘கவலைகளை விட்டு விடுங்கள். உயிர்வாழ எதை உண்பது, உடலை மூட எதை உடுப்பது என்றெல்லாம் நீங்கள் கவலைப்படுவது வீண். உணவை விட உயிரும், உடையை விட உடலும் சிறந்தவை அல்லவா! வானத்துப் பறவைகளைக் கவனியுங்கள். அவை விதைப்பதும் இல்லை, அறுப்பதும் இல்லை, களஞ்சியங்களில் சேமிப்பதும் இல்லை. ஆனால் கடவுள் அவற்றுக்கும் உணவளிக்கிறார்’.

வயல்வெளி மலர்களையோ, காட்டுச் செடிகளையோ கவனித்திருக்கிறீர்களா? சாலமோன் மன்னன் கூட அணிந்திராத மென்மையில் அந்த மலர்களை கடவுள் உடுத்தியிருக்கிறார்.

கவலைப்படுவதால் உங்களில் யாராவது தமது உயரத்தோடு ஒரு முழம் கூட்ட முடியுமா? கவலைப்படுவதால் உங்கள் தலைமுடியில் சிலவற்றைக் கறுப்பாக்க முடியுமா?

கவலைப்படுவது கடவுளை அறியாதவர்களின் பணி. நீங்கள் கடவுளைப் பற்றிக்கொள்ளுங்கள். மற்ற அனைத்தையும் பெற்றுக்கொள்வீர்கள். இயேசு போதனையில் இருந்தார்.

இயேசுவின் சீடரான பேதுரு மாமியார் நோயில் விழுந்தார். பயங்கரமான கொடிய காய்ச்சல் அவளைப் பிடித்தது. வயதானவர்களை வாட்டி எடுக்கும் கொடிய காய்ச்சல்.

அந்தக்காலத்தில் நடைமுறையில் இருந்த வைத்தியம் மிகவும் வித்தியாசமானது. பெரும்பாலும் விலங்குகளின் மண்டை ஓடுகளை எரித்த சாம்பலை நெற்றியில் பூசுவதே மருந்து.

சர்வ நிவாரணி போல அவர்கள் கலாசார மருந்து ஒன்று உண்டு. நரியின் மண்டைஓடு, எலியின் தலை, நண்டுகளின் கண்கள், ஆந்தையின் மூளை, தவளையின் ஈரல், யானையின் உடம்பில் ஒட்டிக் கொண்டிருக்கும் பேன் போன்ற உயிரினங்கள் இவற்றையெல்லாம் கலந்து சுட்டு சாம்பலாக்கியது.

இப்போது வாசித்தால் சிரிப்பை உண்டாக்கும் வைத்தியங்களும் அந்நாட்களில் ஏராளம் உண்டு. ஜலதோஷம் தீரவேண்டுமானால் எலியின் மூக்கில் முத்தமிடுவது, தவளையை வினிகரில் சமைத்து உண்டால் பல்வலி பறக்கும் என்பவையெல்லாம் அவற்றில் சில.

எந்தவிதமான மருந்தும் பேதுருவின் மாமியாருடைய காய்ச்சலைக் குணப்படுத்தவில்லை. மாறாக காய்ச்சலின் வீரியத்தை அதிகரிக்கவே செய்தன. பேதுருவுக்கு இயேசுவிடம் உதவி கேட்பதை விட வேறு வழியில்லை.

இயேசுவின் காதுக்கு செய்தி சென்றதும் இயேசு பேதுருவின் வீட்டுக்கு விரைந்தார். பேதுருவின் மாமியார் இறந்து விடுவார் என்றே சுற்றத்தினர் நம்பியிருந்தனர். பேதுரு கூட அவளுடைய நிலைமையைப் பார்த்து அவ்வாறே நினைத்திருக்கக் கூடும்.

இயேசு நேராக பேதுருவின் மாமியார் படுத்திருந்த படுக்கை அருகே சென்றார். அவருடைய கைகளைத் தொட்டார். அவ்வளவு தான், காய்ச்சல் சட்டென்று விலக மாமியார் எழுந்தாள். அனலடித்த தேகம் சகஜ நிலைக்குத் திரும்பியிருந்தது.

மூட்டுகளில் இருந்த வலி மறைந்திருந்தது. நடுங்கிக் கொண்டிருந்த உடம்பு இயல்பாக இருந்தது. இயேசுவின் முகத்தை ஏறிட்டுப் பார்த்தவள் கண்கள் பனித்தாள். ஒரு தொடுதல் மூலம் தன்னை குணப்படுத்திய இயேசுவின் மீதும் அவருடைய பணிகளின் மீதும் நம்பிக்கை கொண்டாள்.

பேதுருவின் மாமியார் மரணத்தின் பிடியிலிருந்து மீண்டார் என்னும் செய்தி சடுதியில் வீதிகள் தோறும் விரைந்தோடியது. மக்கள் வீடுகளை விட்டு வெளியே ஓடி வந்தார்கள். இயேசு அப்போது அவர்களுடைய பார்வையில் ஒரு மருத்துவர். காய்ச்சல், தொழுநோய், புற்று நோய், வாதம் என அனைத்து விதமான நோயாளிகளும் வீதிகளில் நிரம்பி வழிந்தார்கள்.

இயேசு வந்தார். வந்திருந்த அனைவரையும் குணமாக்கினார்! அதுவும் மக்களோடு பேசிக்கொண்டே, சிரித்துக் கொண்டே, ஒரு நண்பனைப் போல அவர்களிடையே நடந்து அனைவரையும் தொட்டு சுகமாக்கினார். அனைவரையும் வாழ்த்தி அனுப்பி வைத்தார்.

சுகமாக்கும் போதனையாளர்கள் வரலாற்றில் இருந்திருந்தாலும் இயேசுவின் அணுகுமுறை மிகவும் புதிதாக இருந்தது. அவருடைய நோய் தீர்க்கும் முறை பிச்சையிடுவது போல இருக்கவில்லை. ஆத்மார்த்தமான அன்புடன் மிளிர்ந்தது.

மக்கள் இயேசுவை நோக்கி கூச்சலிட்டார்கள், ‘நீர் உண்மையிலேயே கடவுளின் மகன் தான்’.

ஆலய குருக்களும், மறைநூல் அறிஞர்களும் அவசர அவசரமாக ஏடுகளைப் புரட்டினார்கள். பழைய இறைவாக்கினர்கள் ஏதேனும் சொல்லியிருக்கிறார்களா? என்பதை அறிய. அவர்கள் கண்ணுக்குத் தட்டுப்பட்டது இறைவாக்கினர் எசாயா எழுதிய தீர்க்க தரிசனம் ஒன்று.

‘செபுலான் நாடே, நப்தலின் நாடே… இருளில் இருக்கும் மக்கள் பேரொளியைக் காண்பார்கள்…’. கப்பர்நாகும் நகரம் செபுலான், நப்தலி என்னும் நகரங்களின் எல்லையில் தான் இருந்தது. எனவே இந்த தீர்க்க தரிசனம் இயேசுவின் வருகையைக் குறித்ததாக இருக்குமோ என்று அவர்கள் விவாதிக்கத் தொடங்கினர்.

இன்னொருவர் ஏசாயா தீர்க்க தரிசியின் இன்னொரு தீர்க்க தரிசனத்தை குறிப்பிட்டார். ‘அவர் நம் நோய்களைத் தாங்கிக் கொண்டார், நம் வலிகளை ஏற்றுக் கொண்டார்’ இது கூட இயேசுவைக் குறித்ததாக இருக்குமோ? விவாதங்கள் தொடர்ந்தன.

இயேசு சுற்றியிருக்கும் ஊர்களுக்கும் சென்று போதனைகளைச் செய்ய விரும்பினார். கப்பர்நாகூமிலேயே ஒரு மருத்துவரைப் போல தங்கி விட அவர் விரும்பவில்லை. வந்தவர்களைச் சுகமாக்கி விட்டு அவர் சீடர்களுடன் பயணத்தைத் தொடங்கினார்.