அரச பேருந்துகளில் நடத்துனர்கள் மீதிப்பணம் தருவதில்லை : பயணிகள் குற்றச்சாட்டு!

வவுனியா – யாழ்ப்பாணம் சாலையில் இயக்கப்படும் அரச பேருந்துகளில் நடத்துனர்கள் மீதிப்பணம் தருவதில்லை என பயணிகள் குற்றச்சாட்டியுள்ளனர்.

வவுனியா – யாழ்ப்பாணம் சாலை வழித்தடத்தில் இயக்கப்படும் அரச பேருந்துகளில் பயண சீட்டுக்குரிய பணத்தை எடுத்து விட்டு மீதி பணத்தை பயணிகளுக்கு நடத்துனர் வழங்குவதில்லை மற்றும் மீதிப்பணத்தை அவர்களே எடுத்துக்கொள்வதாக பயணிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

வவுனியா கண்டி வீதியில் அமைந்துள்ள அரச பேருந்து நிலையத்திலிருந்து வடக்கின் பல்வேறு பகுதிகளுக்கு பேருந்துகள் செல்கின்றன.

இதில் வவுனியா – யாழ்ப்பாணம் தடத்தில் பயணிக்கும் அரச பேருந்துகளில் பயணிக்கும் பயணிகள் தாங்கள் செல்லவேண்டிய இடத்திற்குரிய கட்டணத்தை செலுத்தி அதற்குரிய பயணச்சீட்டை பெற்று கொள்கின்றனர்.

அத்துடன் சிலர் கூடுதல் பணம் தரும் போது கட்டணம் போக மீதிப்பணத்தை நடத்துனர் தருவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளன.

இறங்கும் போது மீதிப்பணத்தை தருவதாக கூறும் நடத்துனர் பயணிகள் இறங்கும் நிறுத்தம் வந்தவுடன் மீதிப்பணத்தை திரும்ப கேட்டாலும் நடத்துனர் கண்டுகொள்ளாமல் இருந்துவிடுவதாகவும் விசனம் வெளியிட்டுள்ளனர்.

வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு 185 ரூபா வசூலிக்கும் அரச பேருந்து நடத்துனர்கள் பயணிகள் 200 ரூபா வழங்குமிடத்து மீதிப்பணம் 15 ரூபாவை நடத்துனர்கள் வழங்குவதில்லை என பயணிகள் புகார் தெரிவிக்கின்றனர்.

அரச பேருந்து நடத்துனர்கள் பயணச்சீட்டின் பின் பக்கத்தில் மீதி தொகையை எழுதிக்கொடுப்பதாகவும் இறங்குமிடம் வந்தவுடன் பயணிகள் சில நேரங்களில் மீதிப்பணத்தை கேட்டால் சில்லறை இல்லையென கூறுவதாகவும் இதன் காரணமாக பயணிகளுக்கும் நடத்துனர்களுக்கும் வாக்குவாதம் நடப்பது தொடர் கதையாகி வருகிறது என்றும் அதற்கு முற்றுப்புள்ளி வைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள்எதிர்பார்க்கின்றமை குறிப்பிடத்தக்கது.