நாட்டில் கடந்த சில வருடங்களை விடவும் இவ்வருடம் மழைவீழ்ச்சி பெரிதும் குறைவடைந்துள்ளது. இதன் விளைவாக மீண்டும் வரட்சி நிலை ஏற்படக் கூடிய அச்சுறுத்தல் ஏற்பட்டிருக்கின்றது.
கடந்த ஆகஸ்ட் மாதத்திற்கு பின்னர் நாட்டில் வரட்சி நிலை ஏற்பட்டது. அதனால் பல மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் குடிநீர்த் தட்டுப்பாட்டைப் பெரிதும் எதிர்கொண்டனர்.
எனினும் ஒக்டோபர் மாதமளவில் இடைப் பருவ பெயர்ச்சி மழைவீழ்ச்சி ஆரம்பமானதும் அவ்வரட்சி நிலைமை தீவிர நிலையை அடையவில்லை. ஆனால் அம்மழை போதியளவில் கிடைக்கப் பெறவில்லை.
அதேநேரம் வழமை போன்று வட கீழ் பருவப் பெயர்ச்சி மழை வீழ்ச்சிக் காலம் இவ்வருடம் ஆரம்பமாகி சுமார் ஒரு மாதம் கடந்தும் கூட இன்னும் மழை பெய்யத் தொடங்கவில்லை.
இவ்வாறான நிலையில் மழை வீழ்ச்சி குறைவடையக் கூடிய சமிக்ஞை தென்படுவதாக வளிமண்டலவியல் நிபுணர்களும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
வட கீழ் பருவப் பெயர்ச்சி மழை கிடைக்கப் பெறுவதில் ஏற்பட்டுள்ள தாமதத்தின் விளைவாக கிழக்கு மாகாணத்தின் பெரும்பகுதி வேளாண்மை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. அதிக உஷ்ணம் காரணமாக விவசாயப் பயிர்கள் கருகும் அச்சுறுத்தலை எதிர்கொண்டுள்ளன.
இதேவேளை நாட்டின் சில பிரதேசங்களில் மீண்டும் குடிநீருக்குத் தட்டுப்பாடு தலைகாட்டும் நிலையும் ஏற்பட்டுள்ளது.
மேல் மதாகாணத்தின் சில பிரதேசங்களில் அவ்வப்போது மழை பெய்த போதிலும் நீரேந்து பிரதேசங்களில் போதியளவு மழை கிடைக்கப் பெறாதுள்ளது.
இதன் விளைவாக ‘கடந்த காலங்களில் இதே காலப் பகுதியில் இந்நாட்டின் நீர்த் தேக்கங்கள் 95 வீதம் தண்ணீரைக் கொண்டிருக்கும்.
ஆனால் இப்போது இந்நீர்த்தேக்கங்களில் சுமார் 40 வீதத் தண்ணீரே காணப்படுகின்றது என்று மின்சக்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சில் நேற்று முன்தினம் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்திருக்கின்றார்.
கடந்த பத்தாண்டு காலப் பகுதியில் இவ்வருடம் தான் இக்காலப் பகுதியில் இவ்வாறு நீர்த்தேக்கங்களில் தண்ணீர் குறைவடைந்துள்ளது என்றும் அமைச்சர் குறிப்பிட்டுக் கூறியுள்ளார்.
இதேவேளை காற்றின் வேகமும் குறைவடைந்திருக்கின்றது.வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள இந்நிலைமை இந்நாட்டின் மின் உற்பத்தி துறைக்கு எதிர்வரும் நாட்களில் பெரும் சவாலாக அமையுமா என்ற அச்சம் பல மட்டங்களிலும் ஏற்பட்டுள்ளது.
ஏனெனில் இந்நாட்டுக்கு நாளொன்றுக்கு 3000 மெகா வார்ட் மின்சாரம் தேவை. இம்மின் தேவையைத் தண்ணீர், டீசல், நிலக்கரி மற்றும் காற்றலை, சூரிய சக்தி போன்ற புதுப்பிக்கத்தக்க சக்தி என்பவற்றைப் பயன்படுத்தி உற்பத்தி செய்யும் மின்சாரத்தைக் கொண்டுதான் நிறைவேற்றப்படுகின்றது.
என்றாலும் இந்நாட்டில் பயன்படுத்தப்படும் மின்சாரத்தில் பெரும் பகுதி நீர்மின் உற்பத்தி நிலையங்கள் மூலமே உற்பத்தி செய்யப்படுகின்றனது.
ஆனால் தற்போது நிலவும் மழைவீழ்ச்சி குறைந்த நிலை நீடித்தால் மின்வெட்டு அமுலுக்கு வருமா என்ற அச்சமும் கூட ஏற்பட்டிருக்கின்றது.
இருந்தும் அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய, ‘நீரேந்து பிரதேசங்களுக்கு போதிய மழைவீழ்ச்சி கிடைக்காத போதிலும் மின்வெட்டை அமுல்படுத்த வேண்டிய தேவை ஏற்படாது.
ஆனால் மின்சாரத்தைச் சிக்கனமாகப் பாவிக்குமாறு நாட்டு மக்களிடம் வேண்டுகோள் விடுத்திருக்கின்றார்.இது வரவேற்கக் கூடிய வேண்டுகோள் தான்.
ஆனாலும் வீடுகளிலும், அரசாங்க மற்றும் தனியார் அலு-வலகங்களிலும் மின்சாரம் வீண்விரயம் செய்யப்படுவதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.
அதனைத் தவிர்ப்பதற்காக மின்சக்தியின் முக்கியத்துவம் குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவது அவசியம்.
ஏனெனில் மின்சாரத்தின் முக்கியத்துவத்தை உணராததன் வெளிப்பாடாகவே வீடுகளிலும், அரசாங்க மற்றும் தனியார் அலுவலகங்களிலும் மின்குமிழ் மற்றும் மின்விசிறி என்பன இயங்கிக் கொண்டிருப்பதைப் பரவலாக அவதானிக்க முடிகின்றது.
அதன் மூலம் எவருக்குமே பயன் கிடைப்பதில்லை. இவ்வாறு விரயமாகும் மின்சாரத்தை சேமிப்பது நாட்டுக்கு நிச்சயம் நன்மை பயக்கும்.
அதனால் இதனைக் கருத்தில் கொண்டு மின்சாரம் விரயம் செய்யப்படுத்துவதைக் கட்டுப்படுத்துவது குறித்தும் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும்.
அதேநேரம் காலநிலையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களின் விளைவாகவே மழைவீழ்ச்சி குறைவடைந்துள்ளதோடு குறுகிய நேர காலத்தில் அதிக மழைவீழ்ச்சியும் கிடைக்கப் பெறுகின்றது.
இந்நிலைமை அண்மைக் காலமாகவே ஏற்பட்டிருக்கின்றது. ஆனால் இவ்வாறு கிடைக்கப் பெறும் மழைநீரில் பெரும்பகுதி கடலில் கலக்கின்றது.
அவை எவ்விதத்திலும் பயன்படுத்தப்படுவதில்லை. மழைநீரின் முக்கியத்துவம் உணரப்படாததன் விளைவே இது. அதனால் மழைநீரின் பெறுமதியை மக்களுக்கு தெளிவுபடுத்துவது அவசியம்.
அதனூடாக மழை நீரை சேமிக்கும் ஆர்வத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்தக் கூடியதாக இருக்கும்.
இவ்வாறான ஏற்பாடுகளை ஒழுங்குமுறையாக மேற்கொள்ளும் போது மின்சாரத் தட்டுப்பாட்டுக்கோ, குடிநீர்ப் பற்றாக்குறைக்கோ, விவசாய நீர்த் தட்டுப்பாட்டுக்கோ வரட்சி ஏற்பட்டாலும் முகம் கொடுக்க நேராது.