பிறந்த குழந்தையை ஹீட்டரில் காட்டி முகத்தை பொசுக்கிய நர்ஸ்!

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் பகுதியை சேர்ந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாயா என்ற பெண் கடந்த திங்கட்கிழமை அழகான பெண்குழந்தையை பிரசவித்தார். பிரசவம் முடிந்த சிறிது நேரத்தில் அங்கு துணை செவிலியராக வேலை செய்த நீது குர்ஜார் 300 ரூபாயை லஞ்சமாக மாயா குடும்பத்தாரிடம் கேட்டார்.

ஆனால் மாயா குடும்பத்தினர் லஞ்சம் கொடுக்க முன்வரவில்லை. இதனால் ஆத்திரமடைந்த நீது லஞ்சம் குழந்தையை எடுத்து சென்று ஹீட்டர் அருகே தூக்கிப்பிடித்தார். நீதுவின் இந்த செயலால் அச்சமடைந்த குழந்தையின் பாட்டி நீதுவிற்கு 300 ரூபாயும், அங்கிருந்த மற்றொரு செவிலியருக்கு 200 ரூபாயும் லஞ்சமாகக் கொடுத்தார்.

இதனைத் தொடர்ந்து அந்த குழந்தையை மாயா குடும்பத்தாரிடம் கொடுத்து விட்டு நீது சென்றுவிட்டார். ஆனால் ஹீட்டர் அருகே தூக்கிப் பிடித்ததால் குழந்தையின் முகத்தில் காயங்கள் ஏற்பட்டன. இதனைத் தொடர்ந்து அந்த குழந்தை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது.

குழந்தையின் தந்தை லால்சந்த் செவிலியர் நீதுவுக்கு எதிராக காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததைத் தொடர்ந்து இந்த சம்பவம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. நீதுவுக்கு எதிராக பல்வேறு பிரிவுகளின் கீழ் காவல்நிலையத்தில் எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து கேள்விப்பட்ட ராஜஸ்தான் சுகாதாரத்துறை அமைச்சர் காளிசரண் சரப், இதுகுறித்து விரிவாக விசாரணை நடத்தி வருகின்ற டிசம்பர் 26-க்குள் அறிக்கை தாக்கல் செய்யும்படி உத்தரவிட்டுள்ளார். மேலும், நீது உட்பட துணை சுகாதார நிலையத்தில் இருந்த மூன்று செவிலியர்களும் தற்போது இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.