ராகுல் காந்தி பேசக் கற்றுக் கொண்டதில் மகிழ்ச்சி: மோடி கிண்டல்!

ரூபாய் நோட்டு அறிவிப்புக்குப் பிறகு முதல் முறையாக பிரதமர் நரேந்திர மோடி தனது சொந்த தொகுதியான வாரணாசிக்கு இன்று சென்றுள்ளார். பனாரஸ் பல்கலைக்கழக வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றியபோது,  ‘என்னை பேச அனுமதித்தால் பூகம்பம் ஏற்படும்’ என்று ராகுல் காந்தி பேசியதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேசினார். நிகழ்ச்சியில் மோடி பேசியதாவது:-

இளம் தலைவரை (ராகுல்) அவர்கள் கொண்டுள்ளனர். எவ்வாறு பேச வேண்டும் என்று அந்த இளம் தலைவர் கற்றுகொண்டிருக்கிறார். எப்படி பேச வேண்டும் என்று அவர் பேசக் கற்றுக்கொள்ள துவங்கியதில் இருந்து நான் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளேன். கடந்த 10 ஆண்டுகளில் அவர் பேசியிருந்தால் நிலநடுக்கம் ஏற்பட்டிருக்க கூடும். ஆனால் இப்போது அவர் பேச தொடங்கிவிட்டார். ஆகையால், இப்போதைக்கு நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்பு இல்லை. அவர் பேசாமல் இருந்திருந்தால் நிலநடுக்கம் எற்பட்டிருக்கலாம்.

கருப்பு பண ஒழிப்பின் மூலம் இந்தியா தூய்மை அடையும். தற்போது நேர்மையான பாதையில் இந்தியா சென்று கொண்டிருக்கிறது. பழைய ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டபோது எனக்கு மக்கள் ஆதரவு அளித்துள்ளனர். கள்ள நோட்டு புழக்கத்திற்கு பாகிஸ்தான் துணை போகிறது. கருப்பு மற்றும் கள்ளப்பணம் ஒழிப்பு மிக சிரமமான காரியம். பெரும் சவாலாக உள்ளது. கருப்பு பண ஒழிப்பில் இன்னும் மக்கள் எனக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

மேலும், பணமில்லா பரிவர்த்தனை சாத்தியமில்லை என்று கருத்து தெரிவித்த மன்மோகன் சிங்கிற்கு பதிலளித்த மோடி, மன்மோகன்சிங் ஆட்சிக்காலத்தில் உள்ள மோசமான நிலைமையை கூறுகிறாரோ? என்ற சந்தேகம் எழுகிறது என்றார். மேலும், மன்மோகன் சிங் ஆட்சிக்காலத்தில் மிகப்பெரிய முறைகேடுகள் நடந்ததாகவும் மோடி குறிப்பிட்டார்.