குஜராத் மாநில முதல்வராக இருந்த போது பிரதமர் நரேந்திர மோடி பெரு நிறுவனங்களிடம் லஞ்சம் வாங்கியதாக காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி குற்றம்சாட்டி இருந்தார்.
இதனையடுத்து, வாரணாசியில் இன்று பேசிய பிரதமர் நரேந்திர மோடி, ராகுல் காந்தி பேசக் கற்றுக்கொண்டதில் தான் எல்லையில்லா மகிழ்ச்சி அடைந்ததாக கிண்டலாக குறிப்பிட்டு இருந்தார்.
இந்நிலையில், என்னை கேலி செய்வது இருக்கட்டும், ஆனால் நான் கூறிய ஊழல் குற்றச்சாட்டுக்கு பதில் சொல்லுங்கள் என்று மோடிக்கு ராகுல்காந்தி பதிலடி கொடுத்துள்ளார்.
உத்திரபிரதேச மாநிலத்தில் தேர்தல் தொடர்பாக பேரணி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய போது ராகுல்காந்தி இவ்வாறு தெரிவித்தார்.
அப்போது பேசிய அவர், “இந்த குற்றச்சாட்டை நான் மட்டுமல்ல, வேலை வாய்ப்பை உருவாக்கி தருவதாக கூறிய உங்கள் வாக்குறுதியால் ஏமாற்றம் அடைந்த இந்திய இளைஞர்களும் கூறி வருகிறார்கள்.
ஏழை மக்களிடம் இருந்து பணத்தை பிடுங்கி, பணக்காரர்களுக்கு வழங்குகிறார். 99 சதவீதம் பேரிடம் இருந்து பணத்தை எடுத்து, ஒரு சதவீதத்தினரிடம் கொடுக்கிறார்.
அதே கேள்வியை மீண்டும் பிரதமரிடம் கேட்பேன். ஊழலை ஒழிக்க காங்கிரஸ் கட்சி விரும்புகிறது. அதற்காக தேசிய ஜனநாயக கூட்டணி அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு காங்கிரஸ் தனது முழு ஆதரவை அளிக்கும். ஆனால் இந்த ரூபாய் நோட்டு ரத்து நடவடிக்கை ஊழலுக்கோ, கருப்பு பணத்திற்கோ எதிரானது அல்ல.
வங்கியில் வரிசையில் நிற்பவர்களை திருடர்கள் என்று மோடி கூறுகிறார். இன்று வங்கிகள் முன்பு மக்கள் வரிசையில் நிற்பதை பார்த்தேன். மோடி அவர்களே, அவர்கள் திருடர்கள் அல்ல. நேர்மையான ஏழைகள். ” என்றார்.