துணை நிலை ஆளுநர் ராஜினாமா ஆச்சர்யம் அளிக்கிறது: கெஜ்ரிவால்!

டெல்லி துணை நிலை ஆளுநராக பதவி வகித்து வந்தவர் நஜீப் ஜங். டெல்லியில் யாருக்கு அதிக அதிகாரம் என்பது தொடர்பாக இவருக்கும் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும் இடையே தொடர்ந்து பனிப்போர் நிலவி வந்தது.

பிரதமர் மோடி, துணை நிலை ஆளுநர் நஜீப் ஜங் மற்றும் ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை பகடைக்காயாக பயன்படுத்தி தங்களை பழி வாங்குவதாக கடந்த வாரம் கெஜ்ரிவால் வெளிப்படையாக குற்றஞ்சாட்டியிருந்தார்.

இந்நிலையில் யாரும் எதிர்பாராத வகையில் தனது துணை நிலை ஆளுநர் பதவியை நஜீப் ஜங் இன்று ராஜினாமா செய்துள்ளார். தனது ராஜினாமா கடிதத்தை மத்திய அரசுக்கு அனுப்பியுள்ள நஜீப் ஜங், தனக்கு உறுதுணையாக இருந்த மத்திய அரசு மற்றும் டெல்லி மக்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

நஜீப் சங்கின் ராஜினாமா குறித்து அம்மாநில முதல்வர் கெஜ்ரிவால் டுவிட்டரில் கூறுகையில் ‘‘ஜங்கின் ராஜினாமா எனக்கு ஆச்சர்யத்தை அளிக்கிறது. மேலும், அவருடைய எதிர்கால வாழ்க்கைக்கு என்னுடைய வாழ்த்துக்கள்’’ என்று தெரிவித்துள்ளார்.

டெல்லி மாநில துணை முதல்வர் சிசோடியா கூறுகையில் ‘‘நஜீப் ஜங் உடன் இணைந்து டெல்லிக்காக நாங்கள் நல்ல முறையில் உழைத்தோம்’’ என்றார்.