தவறான கருத்துக்களுடன் பிரதமருக்கு எழுதப்பட்டுள்ள கடிதம்..!

பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தியினால் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எழுதப்பட்ட கடிதத்தில் தவறான கருத்துக்கள் இடம் பெற்றுள்ளதாக பிரதமர் அலுவலகம் சுட்டிக்காட்டியுள்ளது.

சுனில் ஹந்துன்நெத்தியின் கடிதத்தை பரிசீலித்து இதற்கு பதில் வழங்கும் வகையில் பிரதமர் அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

மத்திய வங்கி பிணை முறி கொடுக்கல் வாங்கல் மற்றும் அதிகாரிகளின் செயற்பாடுகள் தொடர்பாக கண்காணித்து, உரிய பதில் வழங்குமாறு பிரதமர் கடந்த நவம்பர் 9ம் திகதி சட்டமா அதிபரிடம் கோரியிருந்தார்.

மேலும் சட்டமா அதிபருக்கு குறித்த அறிக்கையை அனுப்புவதாக சபாநாயகருக்கும் அவர் தெரியப்படுத்தியுள்ளார்.

இந்நிலையில், சட்ட மா அதிபர் கோரும் ஏனைய ஆவணங்களை சபாநாயகரின் அனுமதியுடன் வழங்குமாறும் பிரதமர் அறிவுறுத்தியிருந்தார்.

இந்த விடயம் தொடர்பில் பல சந்தர்ப்பங்களில் பாராளுமன்றத்தில் அறிவித்துள்ளதுடன், விவாதத்திற்கு இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் பிரதமர் அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை குறித்த காலப்பகுதியில் பிரதமரால் சபாநாயகரின் அதிகாரம் பயன்படுத்தப்படுவதாக குறிப்பிடாத சுனில் கந்துன்நெத்தி தற்போது அவ்வாறானதொரு கருத்தை கூற முற்படுகின்றார்.

விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் என்ற வகையில் பிரதமரினால், கோப் குழுவின் அறிக்கை சட்ட மா அதிபரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படுவது, சட்டபூர்வமானது.

ஊழியர் ஒருவர் தொடர்பில் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படும் போது அது குறித்து எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் சட்ட மாஅதிபரின் கருத்தைப் பெற்றுக் கொள்வது, சாதாரண விடயம்.

கோப் குழுவின் தலைவர் இதுபோன்ற குற்றச்சாட்டுக்களை முன்வைப்பது, சட்டமா அதிபரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்ட பின்னரே தெரியவரும் என அலுவலகத்தினால் விடுக்கப்பட்ட அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.