ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர், அதிமுகவின் பொதுச் செயலாளராக வி.கே. சசிகலாவை தேர்ந்தெடுக்கக் கூடாது என்று ராஜ்யசபா எம்.பி. சசிகலா புஷ்பா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இந்நிலையில் பொதுச் செயலாளர் பதவிக்கு தாம் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளது அதிமுகவினரிடையே பரபரப்பை கிளப்பியுள்ளது.
அதிமுக பொதுச் செயலாளரும், தமிழக முன்னாள் முதல்வருமான ஜெயலலிதா கடந்த 5ம் தேதி காலமானார்.
அதனைத் தொடர்ந்து அவரது தோழி சசிகலாவை அதிமுகவின் பொதுச் செயலாளராக பொறுப்பேற்றுக் கொள்ளுமாறு அதிமுகவின் மூத்த நிர்வாகிகள் கோரிக்கை வைத்து வருகின்றனர். மேலும், அவர்தான் அடுத்த முதல்வராக பதவியேற்க வேண்டும் எனவும் சில அமைச்சர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில சசிகலா புஷ்பா அளித்துள்ள பேட்டியில், உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை பொறுத்துஇ அதிமுக பொதுச் செயலாளர் பதவிக்கு போட்டியிடுவது பற்றி நான் முடிவு செய்வேன். கட்சியின் அடிப்படை உறுப்பினர் என்ற அடிப்படையில் பொதுச் செயலாளர் பதவிக்கு போட்டியிட எனக்கு உரிமை உள்ளது.
அதிமுகவில் இருந்து இன்னும் என்னை நீக்கவில்லை. நான் கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டிருந்தால், என் மீது விசாரணை நடத்தி கடிதம் அளிக்கப்பட்டிருக்க வேண்டும். தற்போது வரை மாநிலங்களவை ஆவணத்தில் நான் அதிமுக எம்.பி.யாகவே நீடிக்கிறேன்.
அதிமுக பொதுச் செயலாளர் பதவிக்கு சசிகலா நடராஜன் வருவதை 75 சதவீத அதிமுக தொண்டர்கள் விரும்பவில்லை. மக்கள் முன் நாடகம் ஆட கட்சி தொண்டர்களை நடராஜன் மற்றும் அவரது குடும்பத்தினர் வற்புறுத்தி வருகின்றனர். இவ்வாறு சசிகலா புஷ்பா கூறியுள்ளார்.