சென்னையில் ரூ.2,500 கோடி செலவில் 2-வது விமான நிலையம்!

கொடைக்கானலில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வந்த விமான போக்குவரத்து துறை செயலாளர் ஆர்.என். சவுபே நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது,

இப்பகுதியில் ஹெலிகாப்டர் சேவை தொடங்க வேண்டும் என்று சுற்றுலா பயணிகள் கோரிக்கை வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்கான சாத்தியக் கூறு குறைவாகவே உள்ளது. மேலும் அதற்கான கட்டணமும் சற்று கூடுதலாக இருக்கும்.

இந்தியாவில் நடுத்தர வர்க்கத்தினர் 30 கோடிக்கு மேல் உள்ளனர். ஆனால் சுமார் 8 கோடி மக்களே விமான சேவையை பயன் படுத்துகின்றனர். இதற்கு காரணம் பல்வேறு நகரங்களில் விமான நிலையங்கள் அமைக்கப்படவில்லை. சில நகரங்களில் விமான ஓடுதளம் மட்டுமே உள்ளது.

இதனை மேம்படுத்த ரூ.4 ஆயிரத்து 500 கோடி நிதியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. நடுத்தர வர்க்கத்தினர் விமான சேவையை பயன்படுத்தாததற்கு கட்டணம் கூடுதலாக இருப்பதே காரணமாகும். இதையடுத்து சிறிய நகரங்களில் தனியார் நிறுவனங்களை விமான சேவையில் ஈடுபடுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அவர்கள் பயண கட்டணமாக ரூ.2 ஆயிரத்து 500 மட்டுமே பயணிகளிடம் வசூலிக்க வேண்டும். மீதி தொகையை அரசு மானியமாக வழங்கும். இதன் மூலம் விமான பயணிகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கும். இதே போல் ரூ.2,500 கோடி செலவில் சென்னையில் 2-வது விமான நிலையம் அமைக்கப்பட உள்ளது. இதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்பட்டு 3 ஆண்டுகளுக்கு நிறைவு செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.