புதிய தலைமை செயலாளராக கிரிஜா வைத்தியநாதன் பதவி ஏற்றார்!

தமிழக தலைமை செயலாளராக இருந்து ராம மோகனராவின் வீடு மற்றும் தலைமைச்செயலகத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தியதில் பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது.

இதைத் தொடர்ந்து அந்தப் பதவியில் இருந்து ராம மோகனராவ் நீக்கப்பட்டு காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார்.

புதிய தலைமை செயலாளராக மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி கிரிஜா வைத்தியநாதனை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டது.

அவர் இன்று தலைமைச் செயலகத்துக்கு வந்து புதிய தலைமை செயலாளராக பதவி ஏற்றுக் கொண்டார்.

அதன் பிறகு கிரிஜா வைத்தியநாதன் முதல்- அமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தை மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார்.

அவருக்கு மற்ற துறைகளின் செயலாளர்கள், அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனர்.

4-வது பெண் தலைமை செயலாளராக கிரிஜா வைத்தியநாதன் பதவி ஏற்றுள்ளார். தமிழகத்தின் 45-வது தலைமை செயலாளர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கிரிஜா வைத்தியநாதன் சென்னை ஐ.ஐ.டி.யில் படித்து இயற்பியல் பாடத்தில் முதுநிலை பட்டம் பெற்றார். ஐ.ஏ.எஸ். அதிகாரியாக பணியில் சேர்ந்தார்.

1983-ம் ஆண்டு திருவள்ளூர் சப்-கலெக்டராகவும், 9.1.92-ல் மதுரை மாவட்ட கலெக்டராகவும் திறம்பட பணியாற்றியவர். தமிழக அரசின் பல்வேறு துறைகளில் தலைமை பொறுப்பில் பணியாற்றி பெயர் பெற்றவர்.

கிரிஜா வைத்தியநாதனின் தந்தை வெங்கட்ராமன், இவர் இந்திய ரிசர்வ் வங்கியின் கவர்னராக இருந்தவர்.

நடிகரும், பா.ஜ.க. கட்சிப் பிரமுகருமான எஸ்.வி. சேகரின் அண்ணன் மனைவி கிரிஜா வைத்தியநாதன் என்பது குறிப்பிடத்தக்கது.