இந்தியாவின் முன்னணி பேட்மின்டன் வீராங்கனை பி.வி.சிந்து ரியோ ஒலிம்பிக்கில் வெள்ளி பதக்கம் வென்று சாதனை படைத்தார். தற்போது அவர் தரவரிசை பட்டியலில் 6-வது இடத்தில் உள்ளார். இந்த நிலையில் ‘நம்பர் ஒன்’ இடத்தை பிடிப்பதே இலக்கு என்று பி.வி.சிந்து தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
இந்த ஆண்டு எனக்கு அற்புதமாக இருந்தது. ஒலிம்பிக்கில் வெள்ளி பதக்கம் மிகப்பெரிய சாதனை. இதனால் எனது கனவு நனவானது. சூப்பர் கிரீஸ் பட்டம் வெல்ல வேண்டும் என்று எப்போதும் நினைத்து கொண்டு இருப்பேன்.
அதுவும் (சீன ஓபன்) நிறைவாகிவிட்டது. தரவரிசையில் 6-வது இடத்துக்கு முன்னேறி இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. கண்டிப்பாக நம்பர் ஒன் இடத்தை பிடிப்பதே இலக்கு.
நான் தொடர்ந்து கடினமாக உழைக்க வேண்டும். ஏனென்றால் என் மீது பெரிய பொறுப்பு இருக்கிறது. இப்போது அடைந்திருக்கும் நிலையை தக்க வைப்பது சவால் ஆனது. இதற்காக நிறைய உழைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.