விடுதலைபுலிகள் காலத்தில் இருந்த நிலை மாற்றம் : அசௌகரியத்தின் மத்தியில் மக்கள்!

தமிழீழ விடுதலை புலிகள் காலத்தில் விவசாய உற்பத்திகளுக்கும், கடலுணவுகளுக்கும் நிர்ணய விலையை புலிகள் பேணி வந்தார்கள் ஆனால் இப்பொழுது அந்த நிலை மாறியுள்ளமையினால் கடற்றொழிலாளர்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்கொள்கிறார்கள் என மாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார்.

வடமாகாண சபையின் வரவு செலவு திட்டத்தில் மாகாண விவசாய அமைச்சுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியின் மீதான குழுநிலை விவாதம் இன்றைய தினம் பேரவை செயலகத்தின் சபா மண்டபத்தில் நடை பெற்றிருந்தது.

இதன்போது உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

இந்த விவாதத்தில் வடக்கில் விவசாய உற்பத்திகளுக்கும், கடலுணவுக்கும் நிர்ணய விலை பேணப்படாமையினால் விவசாயிகளும், கடற்றொழிலாளர்களும் பெரும் அசௌகரியங்களை எதிர்கொள்கிறார்கள்.

தமிழீழ விடுதலைபுலிகள் காலத்தில் விவசாய உற்பத்திகளுக்கும், கடலுணவு உற்பத்திகளுக்கும் நிர்ணய விலை பேணப்பட்டது.

இதனால் விவசாயிகளும், கடற்றொழிலாளர்களும் அதிகம் நன்மையடைந்தார்கள் ஆனால் தற்போது நிலை அவ்வாறில்லை.

புலிகள் காலத்தில் விவசாய உற்பத்திகளுக்கு தளபதி பால்ராஜ் பொறுப்பாக இருந்தார்.

கடலுணவு உற்பத்திகளுக்கு தளபதி சூசை பொறுப்பாக இருந்தார். அவர்கள் அந்த விலை நிர்ணயத்தை மிக இறுக்கமாக கடைப்பிடித்தார்கள்.

அவ்வாறான நிலை இன்றைக்கு இல்லாத நிலையில் விவசாய உற்பத்திகளுக்கும், கடலுணவு உற்பத்திகளுக்கும் நிர்ணய விலை கொண்டு வரப்பட வேண்டும் என வலியுருத்தினார்.

மேலும், இதேபோல் மாகாணசபை உறுப்பினர் தர்மலிங்கமும் 25 வருடங்கள் நாங்கள் ஒரு சூழலுக்குள் வாழ்ந்தோம் அப்போது விவசாய உற்பத்திகளுக்கு விலை நிர்ணயம் இருந்தது. இப்போது இல்லை என இதன்போது அனந்தி சசிதரன் சுட்டிக்காட்டியமை குறிப்பிடத்தக்கது.