மக்கள் ஒன்லைன் ஊடாக பிரச்சினைகளை ஜனாதிபதிக்கு தெரிவிக்க முடியும்!

மக்களின் குறை கேள் அலுவலகத்தினை எதிர்வரும் ஜனவரி மாதம் 04 ஆம் திகதி ஜனாதிபதியால் யாழில் திறந்து வைக்கப்பட உள்ளது என வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே தெரிவித்தார்.

வட மாகாண ஆளுநர் அலுவலகத்தில் இன்று(23) நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், முதன் முதலாக வட மாகாணத்தினைப் பிரதிநிதித்துவப்படுத்தி “ஜனாதிபதிக்கு சொல்லுங்கள்” என்ற தொனிப் பொருளில் இந்த அலுவலகம் இயங்கவுள்ளது.

வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் இந்த அலுவலகம் திறந்து வைக்கப்படுவதுடன் இதன் மூலம் தொடர்ச்சியாக மக்களின் பிரச்சினைகள் மற்றும் தேவைகள் குறித்து ஜனாதிபதி நேரடியாக மக்களுக்கு தீர்வுகளை வழங்கவுள்ளார்.

கடந்த ஒரு வருடத்திற்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்ட இந்த மக்கள் குறை கேள் அலுவலகம் ஜனாதிபதி செயலகத்தில் இது வரை செயற்பட்டு வந்தது.

அங்கு செயற்பட்டு வந்தமையினால் வட பகுதி மக்களின் தேவைகள் நிறைவேற்றப்படாமலும் தீர்வுகள் கிடைக்காமலும் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்படும் மகஜர்களுக்கு பதில் கிடைக்கவில்லை என்ற குற்றச்சாட்டும் பொது மக்கள் மத்தியில் நிலவி வந்தது.

அதனால், வட மாகாணத்தில் இந்த அலுவலகத்தினை திறந்து வைப்பதற்கு ஏற்பாடுகளை செய்யுமாறு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.

அந்த வகையில், வட மாகாணத்திற்காக புதிதாக திறந்து வைக்கப்படவுள்ள இந்த அலுவலகத்தில் கிழமை தோறும் மக்கள் தமது பிரச்சினைகளை அங்கு நியமிக்கப்படவுள்ள அதிகாரிகளிடம்

மகஜர் மூலமாகவோ நேரடியாகவோ தெரிவிக்க முடியும். கிழமையில் ஒரு நாள் ஜனாதிபதியின் செயலாளருடன் ஒன்லைன் ஊடாகத் தமது பிரச்சினைகளை ஜனாதிபதிக்கு தெரிவிக்கவும் முடியும்.

இதன் திறப்பு விழாவின் போது 1000 பாடசாலை மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் ஜனாதிபதி வழங்கி வைக்கவுள்ளதுடன் அன்றைய தினம் வீரசிங்கம் மண்டபத்தினை சூழவுள்ள பகுதிகளில் மரம் நடுகையும் இடம்பெறவுள்ளன.

இந்த நிகழ்வில் பொது மக்கள் கலந்து கொண்டு ஜனாபதிக்கு தமது பிரச்சினைகளையும் தேவைகளையும் கூறுவுதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட உள்ளது. ஜனாதிபதி நிதியத்தின் ஊடாக நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவ உதவிகளும் வழங்கப்பட உள்ளது எனத் தெரிவித்தார்.