பொருத்து வீடுகள் பொருத்தமற்றவை என்பதே வட மாகாண சபையின் உறுதியான தீர்மானம். மாகாணத்தில் வீடு தேவைப்படும் மக்களுக்கு வீடுகளை பெற்றுக் கொடுக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் பேசி வருகின்றார்கள் என வட மாகாண சபை அவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானம் கூறியுள்ளார்.
வட மாகாண சபையின் 2017 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் மீதான விவாதம் பேரவை செயலகத்தினது சபா மண்டபத்தில் இன்று(23) நடைபெற்ற போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில், பொருத்து வீடுகள் பொருத்தமற்றவை என மாகாண சபை உறுதியான தீர்மானத்தை எடுத்திருக்கின்றது. அந்த தீர்மானம் இன்று மீளவும் உறுதி செய்யப்படுகிறது. மாகாண சபையின் தீர்மானமும் இதுவேயாகும். மற்றைய உறுப்பினர்களுக்கும் இதுவே தீர்மானமாகக் கூறப்படுகின்றது எனத் தெரிவித்தார்.
இந்த விவாதத்தில் பேசிய எதிர்க் கட்சி உறுப்பினர் தவநாதன், “வட மாகாணத்தில் 1 லட்சத்து 30 ஆயிரம் குடும்பங்களுக்கு வீடுகள் தேவையாக உள்ளது. இந்த நிலையில் தேவையான மக்கள் பொருத்து வீடுகளுக்கு விண்ணப்பிக்கலாம் என விளம்பரங்கள் ஊடகங்களில் வருகின்றது. எனவே இந்த வீடுகளைப் பெற விரும்பும் மக்கள் விண்ணப்பிக்கலாமே?” எனக் கேள்வி எழுப்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.