வசந்தமான வாழ்வு அருளும் வசந்தீஸ்வரர் கோவில்!

சேலத்தில் இருந்து 16 கிலோமீட்டர் தூரத்தில் வடமேற்கு திசையில் சரபங்கா நதியோரம் இருக்கிறது ஓமலூர் கோட்டை. இது 16-ம் நூற்றாண்டில் வாழ்ந்த கெட்டி முதலி வம்ச மன்னரான வணங்காமுடி என்பவரால் எழுப்பப்பட்டதாக கருதப்படுகிறது. இந்தக் கோட்டையில் வசந்தீஸ்வரர், விஜயராகவ பெருமாள், கோட்டை மாரியம்மன் கோவில்கள் உள்ளன. கி.பி.1641 முதல் கி.பி.1768 வரை நடந்த தொடர் போர்களால் கோட்டை சிதைவுற்றது. வசந்தீஸ்வரர் கோவிலும், விஜயராகவ பெருமாள் கோவிலும் மட்டுமே தற்போது கோட்டையின் சின்னங்களாக விளங்கிக் கொண்டிருக்கின்றன.

சித்தர் வாழ்ந்த பூமி :

வசந்தீஸ்வரர் கோவிலுக்கும், ராமாயணத்துக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. இதற்கு ஆதாரமாக இருக்கிறது கோவிலில் அமைந்துள்ள சரபங்க முனிவரின் ஜீவ சமாதி.

சேலத்தை அடுத்த தாரமங்கலத்தில் நடைபெற்ற கயிலாசநாதர், சிவகாமி அம்மன் திருமணத்திற்கு, இந்தப் பகுதியில் ஹோமம் வளர்த்ததாகவும், இதில் சரபங்க முனிவர் கலந்துகொண்டு ஹோமபூஜை செய்ததாகவும் தல வரலாறு கூறுகிறது. இதன் காரணமாகவே இப்பகுதி ‘ஹோமலூர்’ என அழைக்கப்பட்டு, நாளடைவில் மருவி ‘ஓமலூர்’ என மாறியது என்கிறார்கள். மேலும் சரபங்க முனிவர் நினைவாக இங்கு ஓடிய நதியும் ‘சரபங்கா நதி’ எனப் பெயர் பெற்றது.

தவ வலிமையில் சிறந்து விளங்கிய சரபங்க முனிவருக்கும், ராமபிரானுக்கும் நெருங்கிய தொடர்புண்டு. கம்பராமாயணத்தில் ஆரண்ய காண்டத்தில் சரபங்கர் பாடப்படுகிறார். தண்ட காரண்யம் என்பது மிகவும் பயங்கரமான காடாகும். இந்த வனத்தில் தான் சரபங்க முனிவரின் ஆசிரமம் இருந்தது. ஒருநாள் பிரம்மதேவரின் உத்தரவுப்படி, இந்திரன் தனது ரதத்தோடு வந்து சரபங்கரை விண்ணுலகத்திற்கு வருமாறு அழைத்தான்.

சரபங்கரோ, இந்திரனோடு வர மறுத்தார். ‘நான் ராமனின் வருகைக்காக காத்திருக்கிறேன். அவனது தரிசனம் கண்ட பின்பே, பிறவி பேறு அடைவேன். இப்போது என்னால் வர இயலாது’ என்றார்.

அந்த நேரத்தில் ராம பிரான், மனைவி சீதை மற்றும் தம்பி லட்சுமணனோடு சரபங்க முனிவரின் ஆசிரமத்துக்கு எழுந்தருளினார். இதனைக் கண்ட இந்திரன் அங்கிருந்து மறைந்தான். ராமனைக் கண்டதும் சரபங்க முனிவர் மெய்சிலிர்க்க, உள்ளம் உருக ஆனந்த கூத்தாடினார்.

சரபங்கர் ஜீவ சமாதி :

‘ராமா! உன் வருகையால் என்னுள்ளம் உவகை அடைந்தது. உடல் புனிதமானது. என் உள்மனம் ‘ராமன்’ வரும் வரை காத்திரு என்று ஆணையிட்டது. அதற்காகவே இதுவரை காத்திருந்தேன். ராமா! உன் தரிசனம் கண்டுவிட்டேன். இனி இந்த உடலை விட்டு மகிழ்ச்சியுடன் விண்ணுலகம் செல்வேன்’ என்றார்.

ராமன் அவருக்கு அருளாசி புரிந்தார். மேலும், தான் வனத்தில் தங்கிட நல்லதொரு இடத்தை உரைக்குமாறு ராமபிரான் கேட்டார். உடனே சரபங்கர், தமது நண்பரான சுதீட்சன முனிவரது ஆசிரமத்திற்கு சென்று தங்கும்படி கூறினார்.

பின்னர் ராமபிரானிடம் விடைபெற்ற சரபங்கர், தமது ஆசிரமத்தின் முன்பு அக்னி வளர்த்து அதில் புகுந்தார். சிறிது நேரத்தில் அக்னியில் இருந்து 30 வயது வாலிபராக வெளிவந்த சரபங்கர், ராமபிரானை தரிசித்தபடியே வானுலகம் சென்றார். அக்னியில் புகுந்த இடத்தில் தான் தற்போது சரபங்கர் ஜீவசமாதி உள்ளது. அந்த பீடத்தின் மீது சிவலிங்கம் அமைக்கப்பட்டுள்ளது.

வசந்தம் தரும் வசந்தீஸ்வரர் :

ஒரு சமயம் தொடர் போர்களால் இந்தப் பகுதியில் கடும் பஞ்சம் ஏற்பட்டது. மழை பொய்த்ததால் விளைநிலங்கள் வானம் பார்த்த பூமியாயின. எங்கும் வறட்சி, பசி, பட்டினி. மக்களின் வறுமை நிலை கண்டு, கெட்டி முதலி மன்னர் பரம்பரையில் வந்த மங்கை நல்லாள் மனம் வருந்தினார். மீண்டும் இந்தப் பகுதியில் வசந்தம் வீசவும், மக்களின் வாழ்க்கை வளம் பெறவும் வேண்டி, இங்கு சுயம்புவாக எழுந்தருளி இருந்த இறைவனுக்கு கோவில் கட்டினார்.

இதையடுத்து எம்பெருமான் திருவுளப்படி வருண பகவான் மும்மாரி பொழிந்திட, எங்கும் பசுமை, செழுமை பரவியது. இதனால் இப்பகுதி மக்களின் வாழ்க்கையில் ‘வசந்தம்’ வீசத் தொடங்கியது. இதன்காரணமாக இந்தக் கோவிலில் உள்ள இறைவன் ‘வசந்தீஸ்வரர்’ என அழைக்கப்பட்டார்.

வசந்தீஸ்வரர் கோவில், ஓமலூர் கோட்டையின் உள்ளே வடகிழக்கு பகுதியில் அமைந்துள்ளது. மூலவரின் திருநாமம் வசந்தீஸ்வரர், அன்னையின் நாமம் அபிதகுசலாம்பிகை. தல விருட்சமாக வன்னிமரமும், தீர்த்தமாக சரபங்கா நதியும் உள்ளன. கோவிலின் வலதுபுறத்தில் சூரியனார், நடனமாடும் விநாயகர், தட்சிணாமூர்த்தி, ஐயப்பன் ஆகியோர் சன்னிதிகள் இருக்கின்றன. தனி சன்னிதியில் வலம்புரி விநாயகர் வீற்றிருக்கிறார். இவரை வழிபட்டால் நினைத்த காரியங்கள் நிறைவேறும்.

கோவிலின் பின்புறம் அரசமரமும், வேப்பமரமும் ஒன்றிணைந்த அதிசய மரம் உள்ளது. இதன் அடியில் நாகர் சிலைகள் உள்ளன. திருமணம் ஆகாத பெண்கள், இந்த மரத்தை மூன்று முறை வலம் வந்து, மரத்தில் மஞ்சள் கயிறு கட்டி நாகரை வழிபட்டால் தோஷம் நீங்கி விரைவில் திருமணம் நடக்கும் என்பது ஐதீகம்.

நாகர் சிலைகளை அடுத்து பஞ்சலிங்க சன்னிதி உள்ளது. இங்கு காஞ்சீபுரம் ஏகாம்பரேஸ்வரர் (நிலம்), திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் (நீர்), திருவண்ணாமலை அண்ணாமலையார் (நெருப்பு), காளஹஸ்தி காளத்தீஸ்வரர் (காற்று), சிதம்பரம் நடராஜர் (ஆகாயம்) ஆகியோர் வீற்றிருந்து அருளாசி வழங்கு கிறார்கள். இவர்களை ஒருசேர தரிசித்தால் பஞ்சபூத தலங் களுக்கு சென்று தரிசித்த புண்ணியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. தொடர்ந்து நவக்கிரக சன்னிதியும், சரபங்க முனிவரின் ஜீவசமாதியும் இருக்கிறது. கோவிலின் இடதுபுறத்தில் அபிதகுசலாம்பிகை தனி சன்னிதியில் வீற்றிருக்கிறார்.

விஜயராகவ பெருமாள் :

சரபங்க முனிவருக்கு, ராமபிரான் தரிசனம் கொடுத்ததன் நினைவாக, வசந்தீஸ்வரர் கோவிலின் தென்மேற்கே விஜயராகவ பெருமாள் கோவில் அமைந்துள்ளது. சீதா, லட்சுமணனோடு கோதண்டராமராக பெருமாள் வீற்றிருக்கிறார். கோட்டையின் தென்கிழக்கே காவல் தெய்வமான எல்லை முனியப்பன் கோவில் உள்ளது. இவர் ‘ராஜமுனியப்பன்’ என்றும் அழைக்கப்படுகிறார். வசந்தீஸ்வரர் கோவிலுக்கு செல்வதற்கு முன்னதாகவே, கோட்டை மாரியம்மன் கோவில் இருக் கிறது.

இந்த ஆலயத்தில் பிரதோஷம், சிவராத்திரி, நவராத்திரி, ஆனி திருமஞ்சனம், ஆருத்ரா தரிசனம், பவுர்ணமி, சஷ்டி, திருக்கார்த்திகை, சங்கடகர சதுர்த்தி, ராகுகால பூஜை, நவக்கிரக பூஜை, பைரவர் பூஜை, அன்னாபிஷேக விழா ஆகியவை சிறப்பாக நடைபெறுகிறது. கோவில் காலை 6 மணி முதல் பகல் 11 மணி வரையும், மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரையும் திறந் திருக்கும்.

ஓங்கார வடிவில் கோவில்கள் :

ஓமலூர் கோட்டை வளாகத்தில் சரபங்க நதிக்கரையில் விஜயராகவ பெருமாள் கோவில், ஆற்றங்கரை அதிசய விநாயகர் கோவில், கருமாரி அம்மன், நாகர் சன்னிதி, பாலமுருகன் சன்னிதி, அனுமன் சன்னிதி, கோட்டை மாரியம்மன் கோவில், வசந்தீஸ்வரர் கோவில் ஆகியவை ஓமலூர் என்ற பெயருக்கேற்ப ‘ஓம்’ என்கிற வரி வடிவப் பாதையில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மனைவியருடன் நவக்கிரகங்கள் :

வசந்தீஸ்வரர் கோவிலின் இடதுபுறத்தில் அதிசய நவக்கிரக சன்னிதி உள்ளது. பெரும்பாலான கோவில் களில் நவக்கிரகங்கள் தனித்து இருக்கும். ஆனால் இங்கு நவக்கிரகங்கள், தங்கள் மனைவியருடன் தம்பதி சமேதராக வீற்றிருந்து அருள் வழங்குகிறார்கள். மேலும் சிறப்பம்சமாக, எந்த கோவிலிலும் இல்லாத வகையில் சூரியபகவான் நடுநாயகமாக, அழகிய 7 குதிரைகள் பூட்டிய ரதத்தில் தமது மனைவியர்களான உஷாதேவி, சாயாதேவி ஆகியோருடன் கம்பீரமாக வீற்றிருக்கிறார். இங்குள்ள நவக்கிரகங்களை வணங்கினால் கணவன்-மனைவி இடையே உள்ள பிரச்சினைகள் தீரும். விவாகரத்து வரை சென்ற தம்பதிகள் கூட, இங்கு வந்து தரிசனம் செய்தால் ஒன்றுபடும் வாய்ப்பு உருவாகும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை.

அமைவிடம் :

சேலத்தில் இருந்து ஓமலூர் டவுன் வரை 15 கி.மீ. தூரமும், ஓமலூரில் இருந்து மேட்டூர் சாலையில் 1.4 கி.மீ. தூரத்திலும் வசந்தீஸ்வரர் கோவில் உள்ளது. சேலத்தில் இருந்து ஓமலூர் வழியாக மேட்டூர், தாரமங்கலம் செல்லும் பஸ்சில் சென்றால், மேச்சேரி பிரிவு ரோட்டில் இறங்கி நடந்து செல்லும் தூரத்தில் கோவில் உள்ளது. சங்ககிரி, மேட்டூர் பக்கம் இருந்து வந்தாலும் மேச்சேரி பிரிவு ரோட்டில் இறங்கவேண்டும். ரெயில் மார்க்கத்தில் சென்றால் ஓமலூர் ரெயில் நிலையத்தில் இறங்கி நடந்து செல்லும் தூரத்தில் கோவில் உள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதம் சூரியனின் ஒளிக்கதிர்கள், மூலவரின் மீது விழும் அதிசய நிகழ்வு நடப்பது விசேஷம். திருமணம் ஆகாத பெண்கள், திருமணமாகி வாழ்க்கையில் துன்பப்படும் பெண்கள், இத்தல இறைவனை வேண்டிக்கொண்டால், வாழ்வில் வசந்தம் வீசும்.