வருமான வரி சோதனைக்கு துணை ராணுவத்தை மத்திய அரசு பயன்படுத்துவற்கு மம்தா பானர்ஜி கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளார்.
கருப்பு பண ஒழிப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக நாடு முழுவதும் வருமான வரி இலாகாவினர் சோதனை நடத்தி வருகின்றனர். தற்போது இதற்கு துணை ராணுவத்தையும் மத்திய அரசு பயன்படுத்த தொடங்கி இருக்கிறது.
தமிழக அரசின் தலைமைச் செயலாளராக இருந்த ராமமோகன ராவின் அண்ணா நகர் வீட்டில் வருமான வரி இலாகாவினர் அண்மையில் அதிரடி சோதனை நடத்தினர். இதேபோல் தலைமைச் செயலகத்தில் உள்ள அவருடைய அலுவலகத்திலும் சோதனை நடத்தப்பட்டது. இந்த 2 இடங்களிலும் துணை ராணுவத்தினரின் பாதுகாப்புடன் வருமான வரி இலாகாவினர் பல மணி நேரம் சோதனை நடத்தினர்.
இதற்கிடையே, வருமான வரி சோதனைகளின்போது பாதுகாப்புக்காக மத்திய தொழிலக பாதுகாப்பு படையினரை (துணை ராணுவம்) நிரந்தரமாக பயன்படுத்திக் கொள்ள மத்திய அரசு முடிவு செய்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
இதற்கு, மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, அரசியல் சாசன பிரிவுகளை சுட்டிக் காண்பித்து, மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங்கிற்கு அவர் ஒரு கடிதம் எழுதி உள்ளார்.
அதில் கூறி இருப்பதாவது,
மத்திய அரசின் இந்த முடிவு அரசியல் சாசனத்துக்கு எதிரானது. சட்ட விரோதமானது. அதேபோல் கூட்டாட்சி தத்துவ முறை கொள்கைகள் அனைத்துக்கும் முற்றிலும் எதிரானதும் ஆகும்.
எவ்வித மத்திய போலீசை (துணை ராணுவம்) எந்த மாநிலத்துக்கு அனுப்பவேண்டும் என்றாலும் அந்த மாநில அரசு கேட்டுக் கொண்டால் மட்டுமே அனுப்பி வைக்கவேண்டும். எனவே மத்திய அரசு இது தொடர்பான தனது முடிவை உடனடியாக திரும்பப் பெறவேண்டும்.
மத்திய முகமைகள் தாங்கள் மேற்கொள்ளும் சட்டப்பூர்வ நடவடிக்கைகளின்போது, தங்களுக்கு எந்த உதவியும் தேவை என்று கேட்டுக் கொண்டால் மாநில அரசும், மாநில போலீசாரும் அதற்கான அத்தனை உதவிகளையும், பாதுகாப்பையும் அளிப்பார்கள்.
இவ்வாறு அதில் கூறி இருக்கிறார்.
மத்திய அரசின் முடிவு தொடர்பாக தனது அரசுக்கு தகவல் எதுவும் வரவில்லை என்று கூறிய மம்தா பானர்ஜி, இது தொடர்பாக ஊடகங்கள் வெளியிட்ட மத்திய அரசின் உத்தரவின் நகலை தனது கடிதத்துடன் மத்திய உள்துறை மந்திரிக்கு இணைத்து இருப்பதாகவும் குறிப்பிட்டார்.
ராஜ்நாத்சிங்கிற்கு எழுதிய கடிதத்தின் நகலை அனைத்து மாநில முதல்-மந்திரிகளுக்கும் மம்தா பானர்ஜி அனுப்பி வைத்து இருக்கிறார்.