புழக்கத்தில் இருந்த 500 ரூபாய் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்த நாள் முதல் அதுதொடர்பான விவாதங்களும், விமர்சனங்களும் தொடர்ந்தவண்ணம் உள்ளன. பாராளுமன்றத்தில் இந்த பிரச்சனையை எதிர்க்கட்சிகள் வலுவாக முன்வைத்ததால் அவை நடவடிக்கைகள் முடங்கின. குறிப்பாக பிரதமர் மோடியின் ரூபாய் நோட்டு நடவடிக்கையை காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்து வருகிறார்.
இந்நிலையில் உத்தரகாண்ட் மாநிலம் அல்மோராவில் இன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி பேசியதாவது:-
ரூபாய் நோட்டுக்கள் ரத்து நடவடிக்கையானது கருப்புப் பணம் அல்லது ஊழலுக்கு எதிரான போராட்டம் அல்ல. அது பொருளாதார கொள்ளை. நாட்டில் உள்ள 99 சதவீத மக்களை கஷ்டத்தில் தள்ளிய பிரதமர், அனைத்து கருப்புப் பணத்தையும் வைத்துள்ள ஒரு சதவீத பணக்கார்களை குறிவைக்கவில்லை.
ஊழலை ஒழிக்க அவரது கட்சி விரும்பினால், ஊழலுக்கு எதிராக மோடி எந்த நடவடிக்கையை எடுத்தாலும் காங்கிரஸ் முழு ஆதரவையும் கொடுக்கும். ஆனால், ரூபாய் நோட்டுக்களை தடை செய்தது ஏழை மக்கள் மீதான தாக்குதல்.
கருப்பு பணம் வைத்திருப்போர் குறித்த பட்டியலை சுவிஸ் அரசாங்கம் மோடி அரசிடம் கொடுத்திருக்கிறது. ஏன் அந்த பட்டியலை மக்களவையிலோ மாநிலங்களவையிலோ தாக்கல் செய்யவில்லை? அந்த பட்டியலில் உள்ள திருடர்கள் யார் என்பது எங்களுக்கு தெரியவேண்டும் இவ்வாறு அவர் பேசினார்.