தமிழகத்தில் ஆட்சியை பிடிக்கும் பா.ஜனதாவின் எண்ணம் பலிக்காது: குஷ்பு

காவேரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற தி.மு.க. தலைவர் கருணாநிதியின் உடல்நலம் விசாரித்த பின்னர், காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய செய்தித்தொடர்பாளர் நடிகை குஷ்பு நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

வங்கிகளிலும், ஏ.டி.எம். மையங்களிலும் பொதுமக்கள் வரிசையில் நின்று பணத்தை எடுக்க சிரமப்படும் நிலையில் தமிழக தலைமை செயலாளராக இருந்த ராமமோகன ராவ் வீட்டில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் பல கோடி ரூபாய் பிடிபட்டுள்ளது. இதுபோல பல்வேறு சோதனைகளில் பல கோடி பணம் பறிமுதல் செய்யப்படுகிறது.

இதன் பின்னணி குறித்த முழு விவரங்களை மத்திய அரசு வெளியிட வேண்டும். சேகர் ரெட்டி வீட்டில் கைப்பற்ற பணம் தொடர்புடைய நபர்கள் யாராக இருந்தாலும், ஏன் பிரதமராக இருந்தாலும் கூட பதவி விலக வேண்டும்.

ரூபாய் நோட்டு விவகாரத்தில் தோல்வி அடைந்து விட்டதை பொதுமக்களிடம் இருந்து திசை திருப்புவதற்காக இதுபோன்ற சோதனைகள் நடத்தப்படுகின்றது. மேலும் ‘ஜன்தன் யோஜனா’ திட்டத்தில் வங்கி கணக்கில் பணம் பதுக்கியவர்கள் விவரங்களை பா.ஜனதா ஏன் வெளியிட தயங்குகிறது? என்று தெரியவில்லை.

வல்லரசாக இருக்கும் நாடுகளில் கூட பணம் தேவைப்படும் நிலையில், பணம் இல்லாத பரிவர்த்தனை சரியான முடிவாக அமையாது. ராகுல் காந்தி கேட்கும் கேள்விக்கும் மோடி பதில் அளிப்பதில்லை. பாராளுமன்றத்திலும் பதில் அளிப்பதில்லை. அரசியல் ரீதியாக இல்லாமல் மக்களே கேட்க ஆரம்பித்துவிட்டார்கள். இதற்கெல்லாம் பா.ஜனதா பதில் அளிக்க வேண்டும்.

இதையெல்லாம் வைத்து பார்க்கும்போது பா.ஜனதா மிகப்பெரிய திட்டத்துடன் உள்ளது தெளிவாகிறது. 2019-ல் தமிழகத்தில் ஆட்சியை பிடிக்க திட்டமிட்டிருந்தால் அந்த எண்ணம் பலிக்காது. ஒரு ஓட்டு கூட கிடைக்காத நிலை தான் பா.ஜனதாவுக்கு ஏற்படும்.

இவ்வாறு குஷ்பு கூறினார்.