சென்னை ஓபன் டென்னிஸ் போட்டிக்கு தமிழக அரசு சார்பில் ரூ.2 கோடி நிதி உதவியை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வழங்கினார்.
தெற்காசியாவில் நடைபெறும் ஒரே ஏ.டி.பி. தொடரான சென்னை ஓபன் டென்னிஸ் திருவிழா அடுத்த ஆண்டு (2017) ஜனவரி 2-ந்தேதி முதல் 8-ந்தேதி வரை சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்.டி.ஏ.டி. ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது. இதில் முன்னாள் சாம்பியன் குரோஷியாவின் மரின் சிலிச், போர்னா கோரிச், ஸ்பெயினின் ராபெர்ட்டா அகுத், இந்தியாவின் லியாண்டர் பெயஸ், ரோகன் போபண்ணா, ராம்குமார் உள்பட முன்னணி வீரர்கள் பங்கேற்க இருக்கிறார்கள்.
உலக புகழ்பெற்ற விளையாட்டு வீரர்கள் கலந்து கொள்ளும் மிக முக்கிய போட்டியான சென்னை ஓபன் டென்னிஸ் போட்டியை சிறந்த முறையில் நடத்திட 2005-ம் ஆண்டு முதல் முறையாக தமிழக அரசின் சார்பில் ரூ.1 கோடி வழங்கப்பட்டது.
அதன் பிறகு தமிழ்நாடு டென்னிஸ் சங்கம், 2012-ம் ஆண்டு சென்னை ஓபன் டென்னிஸ் போட்டியை சிறப்பாக நடத்திட ‘பிரதான பிளாட்டினம் ஸ்பான்சர்’ என்ற வகையில் தமிழக அரசின் சார்பில் ரூ.2 கோடி நிதி உதவி வழங்க வேண்டும் கோரிக்கை வைத்தது. அதை பரிசீலித்த அன்றைய தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா, மக்களின் பெரும் வரவேற்பினை பெற்றுள்ள இந்த போட்டிக்கு ரூ.2 கோடி நிதி உதவி வழங்க உத்தரவிட்டார். அதன்படி சென்னை ஓபன் டென்னிஸ் போட்டியை நடத்திட ஆண்டுதோறும் தமிழக அரசு ரூ.2 கோடி வழங்கி வருகிறது.
இந்த நிலையில் 2017-ம் ஆண்டுக்கான சென்னை ஓபன் டென்னிஸ் போட்டியை சிறப்பான முறையில் நடத்திட ‘பிரதான பிளாட்டினம் ஸ்பான்சர்’ என்ற அடிப்படையில் தமிழக அரசின் பங்களிப்பாக ரூ.2 கோடிக்கான காசோலையை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று தமிழ்நாடு டென்னிஸ் சங்கத்தலைவர் எம்.ஏ.அழகப்பனிடம் வழங்கினார்.
மேற்கண்ட தகவல் தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.