500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது மத்திய அரசு அறிவித்ததை கண்டித்து தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் தலைமை தாங்கினார். முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசியதாவது:-
எந்த நாட்டிலும் நடக்காத ஒரு கொடுமை நவம்பர் 8-ந்தேதி இந்தியாவில் நடந்தது. மக்களிடையே புழக்கத்தில் இருந்த 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் அறிவிக்கிறார். இந்த அறிவிப்பு அதிர்ச்சிகரமாக இருந்தது.
அவசர அவசரமாக இரவு நேரத்தில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது ஏன்? இந்தியாவில் மிகப்பெரிய பொருளாதார நெருக்கடி ஏற்பட்டதோ என்று அஞ்சினேன். இந்த முடிவை யார் எடுத்தது? இதுபோன்ற முடிவை தனிமனிதன் எடுக்க முடியாது.
பிரதமர் நரேந்திரமோடி ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கும்போது மும்பையில் இருந்த ரிசர்வ் வங்கி இயக்குனர்கள் வெளியில் செல்ல முடியாத அளவுக்கு சிறை வைக்கப்பட்டிருந்தனர். அதேபோல் டெல்லியில் மந்திரிகள் சிறை வைக்கப்பட்டிருந்தனர். மோடி அறிவிப்பை வெளியிட்ட பிறகு தான் அவர்கள் வெளியே வந்தனர். இது மோசமான நாடகம்.
பொதுவாக ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற முடிவை எப்போது எடுக்க முடியும்? பணவீக்கம் கட்டுமீறி சென்றால், ஏற்ற, இறக்கங்களை கண்டால் நடவடிக்கை எடுக்கலாம். ஆனால் இந்தியாவில் பணவீக்கமே இல்லையே? 5 சதவீதத்திற்குள்ளே தானே இருக்கிறது. எந்த ஒரு புள்ளிவிவரமும் இல்லாமல் எப்படி நடவடிக்கை எடுக்கலாம். பணப்புழக்கம் இருந்தால் தானே பொருளாதாரம் உயரும். 3 நாட்களில் நிலைமை சரியாகிவிடும் என்றார்கள், இதுவரை இல்லை. நிலைமை சரியாக இன்னும் 6 மாதம் ஆகும்.
இன்றைக்கு நாடு முழுவதும் 11 கோடி பேர் வங்கிகள் முன்பு நிற்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறார்கள். வங்கிகள் முன்பு வாக்கு பெட்டியை வைத்து பாருங்கள். அப்போது தெரியும் உங்கள் நிலை.
சேகர்ரெட்டி கையில் இருந்ததால் அது கருப்பு பணம். விவசாயி கையில் இருந்தால் அது வெள்ளை பணம். நாட்டில் 400 கோடி ரூபாய் போலி என்பதற்காக 17 லட்சம் கோடி மொத்த ரூபாய்க்கு வேட்டு வைத்து விட்டீர்கள். மூட்டை பூச்சிக்காக வீட்டையே கொளுத்தி விட்டீர்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.