ஓமனில் சிறப்பான சேவை புரிந்த ராணுவ வீரர்களுக்கு பாதுகாப்புத்துறை மந்திரி சய்யித் பத்ர் பின் சவுத் பின் காரிப் அல் புசைதி பதக்கம் அணிவித்து கவுரவித்தார்.
ஓமன் நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் நாட்டின் பாதுகாப்பு பணியில் சிறந்த சேவை புரிந்து வருபவர்களுக்கு மன்னர் மேதகு சுல்தான் காபூஸ் சேட் அல் சேட் பதக்கம் வழங்க உத்தரவு பிறப்பித்தார். மன்னரின் உத்தரவின் பேரில் இந்த ஆண்டு 30-க்கும் மேற்பட்ட ராணுவ அதிகாரிகள் பதக்கம் வழங்கி கவுரவிக்க தேர்வு செய்யப்பட்டனர்.
தேர்வு செய்யப்பட்ட ராணுவ வீரர்களுக்கான பதக்கம் அணிவிக்கும் நிகழ்ச்சி பைத் அல் பலஜ் ராணுவ முகாமில் நடந்தது. ஓமன் பாதுகாப்புத்துறை மந்திரி சய்யித் பத்ர் பின் சவுத் பின் காரிப் அல் புசைதி பங்கேற்று, நாட்டின் பாதுகாப்புப் பணியில் சிறப்பான சேவை புரிந்த ராணுவ அதிகாரிகள் மற்றும் வீரர்களுக்கு பதக்கங்களை அணிவித்து கவுரவித்தார்.
தொடர்ந்து ராணுவ மந்திரி சய்யித் பத்ர் பின் சவுத் பின் காரிப் அல் புசைதி பேசும் போது கூறியதாவது:-
ராணுவ வீரர்களின் தியாகம் சிறப்பானது. அவர்கள் தங்களது சொந்த செயல்களை விட்டு விட்டு நாட்டுக்காக எந்த நேரத்திலும் தியாகத்தை செய்வதற்கு தயாராக இருந்து வருகின்றனர்.
மன்னரின் வழிகாட்டுதலின் பேரில் நமது படைவீரர்கள் சிறப்பான திறமை பெற்றவர்களாக விளங்கி வருகின்றனர். இந்த திறமை மேலும் அதிகரிப்பதற்கு வளைகுடா நாடுகளைச் சேர்ந்த ராணுவ வீரர்களுடனும், இந்தியா உள்ளிட்ட பல்வேறு நட்பு நாடுகளுடன் இணைந்து கூட்டு ராணுவ பயிற்சி மேற்கொள்கின்றனர்.
இதன் மூலம் ராணுவம் பற்றிய பல்வேறு உத்திகளை அவர்கள் கற்றுக் கொள்ள ஏதுவாக இருக்கிறது. நமது நாட்டில் எத்தகைய குற்றமும் நடைபெறாமல் இருக்க எல்லைப் பகுதியில் இந்த வீரர்கள் 24 மணி நேரமும் கண்காணிப்பில் ஈடுபடுகின்றனர்.
இதனால் பிற நாடுகளில் இருந்து குற்றவாளிகள் தப்பி வருவது தடுக்கப்படவும், போதைப் பொருள் கடத்தல் உள்ளிட்ட சட்ட விரோத செயல்கள் எதுவும் நடைபெறாமல் பாதுகாக்கப்படுகிறது. இத்தகைய வீரர்களின் தியாகம் பெருமைக்குரியது.
இவ்வாறு அவர் கூறினார்.