சிரியாவில் ஆதிக்கம் செலுத்தி வருகின்ற ஐ.எஸ் அமைப்பினரை ஒடுக்கும் பணியில் அண்டை நாடான துருக்கியும் ஈடுபட்டுள்ளது. இந்நிலையில் சிரியாவின் வடக்கு பகுதியில் ஐ.எஸ். அமைப்பின் கோட்டையாக கருதப்படும் அல்பாப் பகுதியில் நேற்றிரவு துருக்கி படையினர் விமான தாக்குதல் நடத்தினர்.
ஐ.எஸ். அமைப்பினருக்கு எதிராக துருக்கி படையினர் நடத்திய இந்த தாக்குதலில் குழந்தைகள் உட்பட மொத்தம் 88 பேர் பலியாகியுள்ளனர். இதனால் இந்த தாக்குதலை மிக மோசமான தாக்குதல் என மனித உரிமை கண்காணிப்பகம் கருத்து தெரிவித்துள்ளது.
இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக 2 துருக்கி வீரர்களை உயிருடன் எரித்த வீடியோவை ஐ.எஸ். அமைப்பு நேற்று வெளியிட்டுள்ளது. ஐ.எஸ் அமைப்பினரை சிரியாவிலிருந்து வெளியேற்ற சிரியா அரசுப்படைகள் தீவிரமாகப் போராடி வருகின்றன. இதற்கு துருக்கி படைகள் முழு ஒத்துழைப்பை வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.