கிறிஸ்துமஸ் நாளின் முதல் நாள் இரவு கொண்டாட்டம் நிறைந்ததாய் காணப்படும். கிறிஸ்துமஸ் ஈவ் என்றவாறு கொண்டாடப்படும் இந்நிகழ்வு உலகெங்கும் கிறிஸ்துவர்களால் பெருமகிழ்ச்சியுடன் கொண்டாடப்படுகிறது. கிறிஸ்துமஸ் தினத்தின் முழுநாள் கொண்டாட்டத்தின் தொடக்கம் எனக்கூட கிறிஸ்துமஸ் ஈவ்-யை குறிப்பிடலாம். கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின் ஒட்டுமொத்த பங்களிப்பை இந்த மாலை நேர விருந்தும், கேளிக்கையும் பெற்று விடுகிறது. நாம் செய்யும் அலங்கரிப்பும், தோரணநிகழ்வுகளும், பட்டொளி வீசும் நட்சத்திர அலங்காரமும் கிறிஸ்துமஸ் இரவு விருந்து நிகழ்விற்கு ஏற்றவாறே அமைகிறது.
ஏனெனில் ஏசு கிறிஸ்து பிறந்தது நல்இரவுதான் என்பதால் அவரை வரவேற்கும் விதமாய் மகிழ்ச்சியுடன் தங்களுக்கென பிரத்யோக உணவுகளை பரிமாறி உண்டு, பரிசளித்து மகிழ்கின்றனர். மாலை நேரத்திலும் நல்இரவிலும் தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெறும். அப்பிரார்த்தனையில் ஒவ்வொரு குடும்பத்தின் அனைத்து உறுப்பினர்களும் கட்டாயம் ஒற்றுமையுடன் கலந்து கொள்வர். இந்த கிறிஸ்துமஸ் இரவு என்பது ஜெர்மனில் ஹெலிஜ் தச்சட் என்றும் (ஹோலி நைட்), நச்சேபுனா என்ற (நல்ல இரவு) ஸ்பானிஷ் மொழியில் அழைக்கப்படுகிறது. கிறிஸ்துமஸ் நல்இரவு கொண்டாட்டம் உலகளவில் அந்தந்த சமூக, கலாசாரத்திற்கு ஏற்ப மாறுபடுகிறது.
தேவாலயங்களில் பிரார்த்தனை:
சில தேவாலயங்களில் சூரியன் அஸ்தமனம் ஆன பிறகு இரவு 7.00 மணிக்கு பிரார்த்தனை கூட்டம் என்றவாறும், சில தேவாலயங்களில் நல் இரவு பிரார்த்தனை கூட்டம் என்றவாறு இருக்கும். இயேசு கிறிஸ்து குடிலில் பிறக்கும் நேரம் வான வேடிக்கையும், தேவாலய மணிகளின் ஒலியும் வானை பிளக்கும். கிறிஸ்துவ குடும்பங்களின் ஒட்டு மொத்த உறுப்பினர்களும் புத்தாடை அணிந்து இந்த பிரார்த்தனை கூட்டத்தில் கலந்து கொள்வர். கிறிஸ்து பிறந்ததின் மகிழ்ச்சியாய் சாண்டாகிளாஸ் அங்கு குழந்தைகளும் பல்வேறு பிரிசுகளை வாரி வழங்குவார். சில சமயம் அவரவர் வீடுகளுக்கே சாண்டாகிளாஸ் வந்து பரிசுகளை வழங்குவார்.
மின்னொளியில் பிரகாசமாய் இல்லங்கள்:
கிறிஸ்துமஸ் நல்இரவு கொண்டாட்டத்தில் பெரும்பாலும் இல்லங்கள் கிறிஸ்துமஸ் விளக்குகள், கிறிஸ்துமஸ் மரம், பூக்கள், நட்சத்திரங்கள் என மின்னொளியில் பிரகாசிக்கும். கண்சிமிட்டும் மின் விளக்கு ஒளியில் கிறிஸ்துமஸ் மர அலங்காரங்கள் அதிக ஜொலிப்புடன், பரிசுகளுடன் காணப்படுவது கிறிஸ்துமஸ் நல் இரவில்தான். சிலர் வீடுகளில் கிறிஸ்து பிறப்பதற்கு ஏற்ற குடில் அமைப்பை அவரவர் வசதிக்கு ஏற்ப அலங்கரித்து வைப்பர். பின் நல் இரவில் குழந்தை இயேசுவை குடிலில் பிறந்த அமைப்பில் வைத்துவிடுவர். நல் இரவு விருந்து கொண்டாட்டத்தில் உறவினர்கள் மற்றும் நண்பர்களின் வருகை அதிகபடியாக இருக்கும்.
நல் இரவு விருந்தின் உணவு பரிமாற்றங்கள்:
உலகெங்கும் பலவிதமான நல் இரவு விருந்து பரிமாற்றங்கள் நடைபெறும். அவரவர் பாரம்பரிய தன்மைக்கு ஏற்ப இவை மாறுபடுகின்றன. குழந்தைகளுக்கு தரும் கிறிஸ்துமஸ் கேண்டி கேன், பிளம் கேக், ப்ரூட் கேக், ஒயின், வான்கோழி மற்றும் ஆடு, கோழி போன்ற இறைச்சி உணவுகள் பிரதான இடம்பிடிக்கும். அயல் நாடுகள் பலவற்றிலும் கிறிஸ்துமஸ் இரவு விருந்து மேஜையில் முதல் இடம் பிடிப்பவை வான்கோழிதான். ஏனெனில் 16-ம் நூற்றாண்டில் எட்டாம் ஹென்றி கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்டத்தில் வான்கோழியை உட்கொண்டதால் இது தொடர்ந்து வருகிறது. பழகேக் என்பது சிறப்பம்சம் கொண்டது. இந்த கிறிஸ்துமஸ்-யில் செய்யப்படும் பழ கேக் அடுத்த கிறிஸ்துமஸ் வரை சேமித்து வைக்கப்பட வேண்டும் என்ற முறை உள்ளது. அறுவடை கால முடிவில் செய்யப்படும் இந்த கேக் அடுத்த அறுவடை அடுத்த அறுவடை காலம் வரை சேமித்து உண்னுதல் வேண்டுமாம். இதனால் அதிர்ஷடம் ஏற்படுமாம். அதுபோல் நல் இரவு விருந்தில் பரிமாற்றப்படும் உணவுகளின் எண்ணிக்கை 5 முதல் பன்ணிரண்டு வரை எண்ணிக்கையில் அமைதல் வேண்டுமாம். ரஷ்யாவில் 12 வகை கிறிஸ்துமஸ் நல் இரவு விருந்து என்றே அழைக்கின்றனர்.
பழங்காலத்தில் சூரிய அஸ்தமனம் ஆன பிறகு புதிய நாள் தொடங்குகிறது என்பது அர்த்தம். அதனாலேயே டிசம்பர் 24-ம் தேதி இரவை கிறிஸ்துமஸ் விஜில் (அ) கிறிஸ்துமஸ் ஈவ் என்றவாறு சிறப்புடன் கொண்டாடி மகிழ்கின்றனர்.