19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட்: இலங்கையை வீழ்த்தி இந்திய அணி சாம்பியன்!

19  வயதுக்கு உட்பட்டோருக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டம் கொழும்பு நகரில் இன்று நடைபெற்றது.

இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 273 ரன்கள் குவித்தது.  இந்திய அணி சார்பில் ரானா (71), சுப்மன் கில் (70) ரன்கள் குவித்தனர்.

பின்னர் விளையாடிய இலங்கை அணி 48.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியை தழுவியது. இலங்கை அணி தரப்பில் தொடக்க வீரர் கெல்லி மட்டும் அதிகபட்சமாக 62 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

இதனால் இந்திய அணி 34 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, தொடர்ந்து மூன்றாவது முறையாக இந்த கோப்பையை கைப்பற்றியது.

இந்தியா சார்பில் கேப்டன் அபிஷேக் சர்மா 29 ரன்கள் எடுத்ததோடு மட்டுமல்லாமல், 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தி ஆல்-ரவுண்டராக அசத்தினார்.

இந்தியாவில் 19 வயதுக்குட்பட்டோருக்கான அணிக்கு முன்னாள் கிரிக்கெட் வீரர் ராகுல் திராவிட் பயிற்சியாளராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.