மீண்டும் டென்னிஸ் களம் திரும்புவேன்:கத்திக்குத்துப்பட்ட கிவிடோவா பேட்டி!

செக்குடியரசு நாட்டை சேர்ந்த நட்சத்திர டென்னிஸ் வீராங்கனை பெட்ரா கிவிடோவா கடந்த 20-ந்தேதி தாக்கப்பட்டார். அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் கிவிடோவாவின் வீட்டிற்குள் நுழைந்த மர்ம ஆசாமி அவரை கத்தியால் குத்தி விட்டு தப்பி ஓடி விட்டான். இதில் கிவிடோவாவின் இடது கையில் பலத்த காயம் ஏற்பட்டது. விரல்கள் கிழிந்து ரத்தம் கொட்டின. உடனடியாக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு ஆபரேஷன் செய்யப்பட்டது. எப்படியும் 6 மாதங்கள் வரை அவர் ஓய்வு எடுக்க வேண்டியது இருக்கும். இந்த நிலையில் இடக்கை ஆட்டக்காரரான 26 வயதான பெட்ரா கிவிடோவா சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார். அதைத் தொடர்ந்து கையில் கட்டுப்போட்ட நிலையில் நேற்று நிருபர்களை சந்தித்தார். அப்போது விம்பிள்டன் முன்னாள் சாம்பியனான கிவிடோவா கூறியதாவது:-

‘எனக்கு நடந்த இந்த சம்பவம் பயங்கரமானது தான். அதற்காக ஒரு பாதிக்கப்பட்ட நபராக எனக்குள் நினைத்துக்கொள்ள விரும்பவில்லை. நடந்த சம்பவத்தை திரும்பி பார்க்க மாட்டேன். இப்போது நன்றாக இருப்பதாக உணர்கிறேன். அதை உங்களிடம் மகிழ்ச்சியோடு சொல்லிக்கொள்கிறேன். இந்த கடினமான தருணத்தில் எனக்கு ஆதரவாக இருந்த மருத்துவ குழுவினர், போலீசார், குடும்பத்தினர், எனது உதவியாளர்கள் அனைவருக்கும் நன்றி.

இனி காயம் எப்படி குணமடைகிறது என்பதை பார்க்க வேண்டும். 3 மாதங்களோ, 6 மாதங்களோ அல்லது ஒரு ஆண்டோ? களம் திரும்ப எவ்வளவு காலம் பிடிக்கும் என்பது முக்கியம் அல்ல. ஆனால் ஒரு நாள் நிச்சயம் டென்னிஸ் களம் திரும்ப வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறேன். அதற்காக என்னால் முடிந்த எல்லாவற்றையும் செய்வேன்.

நேற்று முன்தினம் மருத்துவபரிசோதனையின் போது, பாதிக்கப்பட்ட இடது கையில் விரல்களை என்னால் அசைக்க முடிந்தது. இது எனக்கு கிடைத்த மிகச்சிறந்த கிறிஸ்துமஸ் பரிசாக கருதுகிறேன்’

இவ்வாறு கிவிடோவா கூறினார்.