பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் வரும் 26-ந்தேதி மெல்போர்ன் நகரில் தொடங்குகிறது.
கிறிஸ்துமஸ் தினத்திற்கு அடுத்த நாள் நடக்கும் இந்த டெஸ்ட் ‘பாக்சிங் டே’ டெஸ்ட் என்று அழைக்கப்படுகிறது. இந்த டெஸ்டில் விளையாட ஆஸ்திரேலியாவின் ஒவ்வொரு வீரர்களும் விரும்புகிறார்கள்.
அதே ஆசை அந்த அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க்கிற்கும் இருந்தது. ஆனால் கடந்த 2011-ம் ஆண்டில் இருந்து அவர் பாக்சிங் டே டெஸ்டில் விளையாடியது கிடையாது.
2012-ம் ஆண்டு அதிக போட்டிகளில் விளையாடியதால் ஓய்வு அளிக்கப்பட்டது. அதன்பின் 2013-ம் ஆண்டு ஆஷஸ் தொடர் முழுவதும் விளையாடவில்லை. 2014-ல் இந்தியாவிற்கு எதிரான தொடரில் பிரிஸ்பேன் டெஸ்டில் வெற்றி பெற்று, ரியாஸ் ஹாரிஸ் அணிக்கு திரும்பியதால் வாய்ப்பு கிடைக்கவில்லை. கடந்த வருடம் கணுக்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக அணியி்ல் இடம்பெறவில்லை.
தற்போது அவர் விளையாட அதிக வாய்ப்பு உள்ளது. ஏனெனில், பிரிஸ்பேனில் நடைபெற்ற போட்டியில் பாகிஸ்தானை கஷ்டப்பட்டுதான் ஆஸ்திரேலியா வீழ்த்தியது. இதனால் இந்த போட்டியில் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்ற அவர் கட்டாயம் களம் இறக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.