இந்தி நடிகை கரீனா கபூர் 2012-ஆம் ஆண்டு நடிகர் சயீப் அலிகானை திருமணம் செய்து கொண்டார். இந்த நட்சத்திர தம்பதிக்கு இரு தினங்களுக்கு முன்பு மும்பை ஆஸ்பத்திரியில் ஆண் குழந்தை பிறந்தது. பிரசவத்துக்கு முன்பே தங்கள் குழந்தைக்கு சரித்திர காலத்தில் புகழ் பெற்ற ஒருவரின் பெயரை சூட்ட வேண்டும் என்று முடிவு செய்து இருந்தனர்.
ஆண் அல்லது பெண் குழந்தை பிறந்தால் என்ன பெயர் வைப்பது என்று பெயரையும் தேர்வு செய்து வைத்து இருந்தார்கள். இதனால் அவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்ததுமே அந்த குழந்தைக்கு உடனடியாக தைமூர் அலிகான் பட்டோடி என்று பெயர் சூட்டினார்கள். இந்த பெயர் தற்போது சர்ச்சைக்கு உள்ளாகி இருக்கிறது.
இந்தியா மீது 14-ம் நூற்றாண்டில் படையெடுத்து ஏராளமானோரை கொன்று குவித்த மங்கோலிய மன்னன் பெயரே தைமூர் என்பது ஆகும். இந்த பெயரை குழந்தைக்கு சூட்டியதால் கரீனா கபூருக்கு டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் எதிர்ப்புகள் கிளம்பி இருக்கிறது. அந்த பெயரை மாற்ற வேண்டும் என்றும் பலர் வற்புறுத்தி வருகிறார்கள்.
‘பாகிஸ்தான் ஏவுகணையின் பெயரும் கரீனா கபூர் குழந்தையின் பெயரும் ஒன்றுதான்’, என்றும் விமர்சித்து கருத்துகள் பதிவிட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் கரீனா கபூர் குழந்தை பெயரை விமர்சிப்பவர்களுக்கு அவரது உறவினரும் நடிகருமான ரிஷி கபூர் கண்டனம் தெரிவித்து உள்ளார். தனது டுவிட்டர் பக்கத்தில் ‘பெற்றோர்கள் அவர்களின் குழந்தைக்கு என்ன பெயர் சூட்டினால் மக்களுக்கு என்ன? அவரவர் வேலையை பாருங்கள். பெயர் சூட்டியதற்கும் உங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை. பெயர் சூட்டுவது பெற்றோரின் விருப்பம்’ என்று கூறி இருக்கிறார்.
ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்-மந்திரி உமர் அப்துல்லாவும் கரீனா கபூர்-சயீப் அலிகானுக்கு ஆதரவு தெரிவித்து உள்ளார். குழந்தை பெயர் சர்ச்சையாகி இருப்பது கரீனா கபூருக்கு வருத்தத்தை ஏற்படுத்தி இருப்பதாக நெருக்கமானவர்கள் தெரிவித்தனர். பெயரை மாற்றுவது குறித்து அவர் ஆலோசிப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.