மத்திய அரசினால் கொண்டுவரப்படவுள்ள அபிவிருத்தி விசேட ஏற்பாடுகள் சட்ட மூலத்தை வடக்கு மாகாண சபை நிராகரித்து தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியுள்ளது. இந்த சட்ட மூலத்தினூடாக மாகாண சபைகளின் அதிகாரங்கள் பறிக்கப்படும் அதேவேளை, அதிகாரப்பகிர்வுக்கு புறம்பாக இந்த சட்டமூலம் காணப்படுவதாக கூறப்பட்டே மேற்படி நிராகரிப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதனை வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் விசேட தீர்மானமாக சபையில் கொண்டு வந்திருந்தார்.
வடக்கு மாகாணசபையின் பாதீடு மீதான விவாத அமர்வு நேற்றையதினம் நடை பெற்றது. இந்த அமர்வின் ஆரம்பத்தில் பொது முக்கியத்துவம் வாய்ந்த தீர்மானம் ஒன்றை கொண்டுவரவுள்ளதாக கூறி அவைத்தலை வரின் அனுமதியுடன் மேற்படி எதிர்ப்பு தீர்மானத்தை வடக்கு மாகாண முதலமைச்சர் சபையில் பிரேரித்தார்.
இதன் போது முதலமைச்சர் உரையாற்றுகையில்,
அபிவிருத்தி விசேட ஏற்பாடுகள் சட்டம் என்ற பெயரில் மத்திய அரசாங்கம் புதிய சட்டமொன்றை கொண்டுவர முனைகின்றது. இந்த சட்டத்தினூடாக மத்திய அரசாங்கம் தான் நினைத்ததை எவ்வாறு செய்யவேண்டும் என அவர்கள் ஒரு முடிவுக்கு வந்து நாடு முழுவதுமாக பொருளாதார ரீதியில் தாங்கள் நினைத்ததை செய்ய முயற்சி செய்கின்றனர். இது சம்பந்தமாக சில மாதங்களுக்கு முன்னர் ஒரு சம்பவம் இடம்பெற்றது.
அநுராதபுரத்திலிருந்து செட்டிக்குளம் நோக்கி நீர் கொண்டுவருவது சம்பந்தமாக செயற்திட்டம் ஒன்று இருக்கின்றது. அங்கிருந்து நீர் கொண்டுவருவது என்பதை நாங்கள் வரவேற்கின்றோம். ஆனால் குறித்த திட்டம் வடமாகாண எல்லைக்குள் வரும்போது அந்த செயல் திட்டம் தொடர்பாக பரிசீலனை செய்ய வேண்டும். அத்துடன் என்னவிதமான விடயங்களை உள்ளடக்க வேண்டும் என்பதை நாம் ஆராய வேண்டும். ஆகவே இது தொடர்பான விடயங்களை ஆராய்வத ற்கு எங்களுக்கு அதிகாரம் இருக்கின்றதா? என மகாவலி அதிகார சபையிடம் வினாவினேன்.
அந்தந்த நேரத்தில் அந்தந்த சட்டத்தில் என இருக்கின்றதோ அந்த சட்டத்தின் படி அவற்றை நடைமுறைப்படுத்தலாம் என பதிலளித்தனர்.அதன் அர்த்தமானது மகாவலி சபை 1979 ஆம் ஆண்டு வந்தது. ஆனால் 13 ஆவது திருத்த சட்டமானது 1987 ஆம் ஆண்டிலேயே வந்தது. அதன் பிரகாரம் முன் னைய ஆட்சிக்காலத்தில் நாடு பூராகவும் சில உரித்துக்களையும் அதிகாரங்களையும் பாவிக்க கூடியதாக இருந்தது.
இதே போலவே தான் அனைத்து விடயங்களிலும் மத்திய அரசாங்கம் தான்தோன்றித்னமாக தாங்கள் நினைத்ததை செய்யவேண்டும் என்பதற்காகத்தான் இந்த அபிவிருத்தி சட் டத்தையும் கொண்டுவர முனை கின்றனர்.
மாகாண சபைக்கு வர வேண்டிய அதிகாரங்கள் செயற்பாடுகள் போன்றவற்றில் மத்திய அரசாங்கம் தலையிடுவது ஏற்புடைய விடயமல்ல. ஆனால் அனைத்து மாகாண சபைககளின் முதலமைச்சர்களை பொறுத்த வரையில் ஒரு ஒற்றுமை காணப்படுகின்றது.
அதே போலதான் ஊவா மாகாண சபையிலும் குறித்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அதேபோல நாங்களும் எதிர்க்க வேண்டிய நிலைமை இருக்கின்றது. ஏனெனில் நாங்கள் கீழிருந்து மேல்நோக்கி பயணி க்கவேண்டிய தேவையில் இருக்கின்றோம்.
ஆனால் இந்த சட்டமூலம் வருமானால் நாங்கள் மேலிருந்து கீழ் நோக்கி செல்கின்ற தன்மையே காணப்படும். அதிகாரப்பகிர்வின் ஊடாக நாங்கள் தீர்மானங்கள் எடுக்க வேண்டும் அதனை மத்திய அரசாங்கமும் அதனை ஏற்றுக்கொண்டு எங்களுடன் பயணிக்க எதுவாக இருக்க வேண்டும். இந்த சட்ட மூலமும் எங்கள் மீது திணிக்கும் விடயமாக தான் நாங்கள் பார்க்கின்றோம்.மாகாண முதலமைச்சர் சந்திப்பு தொடர்பில் ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன.
ஆனாலும் எனக்கு அது தொடர்பான உத்தியோக பூர்வமான கடிதம் கிடைக்கவில்லை. அத்துடன் குறித்த சந்திப்பு நடைபெறாது என்று தெரிவிக்கப்பட்டது.எது எவ்வாறு இருப்பினும் நாங்கள் அபிவிருத்தி விசேட ஏற்பாடுகள் சட்டத்தை நாங்கள் ஏற்கமாட்டோம் என்ற முடிவை எடுக்கின்றோம் என முதலமைச்சர் தெரிவித்தார்.இதனை சபையினர் அனைவரும் ஏற்றிருந்தனர்.