3 ஆயிரத்து 349 ஏக்கர் வயல் நிலங்களை முல்லைத்தீவில் சிங்களவர்கள் ஆக்கிரமிப்பு :வடக்கு சபையில் உறுப்பினர் ரவிகரன் தகவல்!

முல்லைத்தீவில் 3 ஆயிரத்து 349 ஏக்கர் வயல் நிலங்களை சிங்களவர்கள் ஆக்கிரமித்து வைத்துள்ளனர் என்ற புதிய தகவலை வடக்கு மாகாண சபையில் உறுப்பினர் ரவிகரன் வெளிப்படுத்தியுள்ளார். வட க்கு மாகாண மீன்பிடி போக்குவரத்து வர்த்தக வாணிப அமைச்சின் வரவு செலவு திட்டத்தின் மீதான விவாதம் நேற்றைய தினம் அவைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் தலைமையில் நடைபெற்றது.

இதன்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

மீன்படி அமைச்சர், முல்லைத்தீவில் 40 ஆயிரம் தமிழ் குடும்பங்கள் வாழும் பகுதிகளில் ஏழு குளங்களில் நன்னீர் மீன் குஞ்சு விட்டுள்ளார். இதே அமைச்சர் 3 ஆயிரத்து 33 சிங்கள குடும்பங்கள் வாழும் பகுதியில் உள்ள மூன்று குளங்களிலும்; மீன் குஞ்சு விட்டுள்ளார்.

இது எந்த வகையில் சம நிலையாகின்றது? புதுக்குடியிருப்பில் உள்ள விசுவமடுகுளம், உடையார்கட்டுகுளம், கரைத்துரைப்பற்றில் உள்ள மடவளசிங் கன்குளம், தண்ணிமுறிப்புகுளம், ஒட்டிசுட்டானில் உள்ள முத்தையன்கட்டுகுளம், மாந்தை கிழக்கில் உள்ள வவுனிக்குளம், துணுக்காயில் உள்ள தெண்ணியன்குளம் என தமிழர்கள் வாழும் பகுதிகளில் உள்ள ஏழு குளங்களில் மட்டுமே மீன்படி அமைச்சர் மீன்குஞ்சு விட்டுள்ளார்.

ஆனால் 3 ஆயிரத்து 33 சிங்கள குடும்பங்கள் மட்டுமே உள்ள பகுதியில் காணப்படும் ஜனகபுர, கலியாணபுர வெவ, சம்மல்வெவ என மூன்று குளங்களிலும் மீன்குஞ்சு விட்டுள்ளார். இது தவிர தண்ணிமுறிப்பிலும் சிங்களவர்கள் மீன்பிடியில் ஈடுபடுகின்றனர். இந்த நிலையில் அமைச்சர் மீன்குஞ்சு விடுவதில் சிங்களவர்களுக்கு அதிக முக்கியத்துவம் வழங்கி வருகின்றார்.

முல்லைத்தீவில் 3 ஆயிரத்து 349 ஏக்கர் வயல் நிலங்களை சிங்களவர்கள் ஆக்கிரமித்து வைத்துள்ளனர். இந்த நிலையில் அவர்களை வெளியேற்றுவதா? ஆதரிப்பதா? இவ்வாறு தமிழர்களின் நிலங்களும் அங்கு பறி போய் கொண்டு உள்ளன. விகாரைகள் புதிதாக முளைத்து கொண்டுள்ளன எனவும் உறுப்பினர் ரவிகரன் சபையில் சுட்டிக்காட்டினார்.