விக்னம் நீங்க விக்னேஸ்வர பூஜை எவ்வளவு அவசியமோ அதேபோல் துன்பங்கள் நீங்க காமாட்சியை வழிபடுவது நல்லது. எல்லாத் தீமைகளையும் அழித்து எல்லாத் தடைகளையும் போக்கி நல்வாழ்க்கையைத் தருபவள் அருள்மிகு காமாட்சியே ஆவாள். வெற்றியை விரும்புவோர் மாங்காடு காமாட்சியை விரும்பி வழிபடுவர்.
சிவன், விஷ்ணு, பிரம்மன், யமன், இந்திரன், முதலான தேவர்களின் மகாசக்திகளின் ஒட்டு மொத்த வடிவமாக அருள்மிகு காமாட்சி விளங்குவதால் அவள் பல ரூபங்களை கொண்டவள். அவளை நினைத்தாலும் அவளுடைய மகாமந்திரங்களை ஜபித்தாலும் நமக்கு ஏற்படக்கூடிய மரண பயம், இகலோக பயம், பரலோக பயம், அரவு பயம், சுருதி பயம், வேதனா பயங்கள் ஓடி ஒளிகின்றன. அனைத்து தேவர்களையும் வணங்கிய பயன் கிட்டுகிறது. ஞாயிறு, செவ்வாய், வெள்ளிக்கிழமைகளிலும் அமாவாசை, பௌர்ணமி நாட்களிலும் காமாட்சியை வழிபடுவது சாலச்சிறந்தது.
ஒருவருடைய ஜாதகத்தில் கிரக தோஷத்தால் திருமணத் தடைகள் ஏற்படும். இதிலிருந்து நிவர்த்தி பெற அருள்மிகு காமாட்சிக்கு புடவை சார்த்தி எலுமிச்சம்பழ மாலை, செவ்வரளி மாலை அணிவித்து பசு நெய் அல்லது நல்லெண்ணையால் தன் வயது எண்ணிக்கையுள்ள தீபம் ஏற்றி குங்குமத்தால் அருச்சனை செய்தால் திருமணத் தடைகள் நீங்கும். மகப்பேறு, தொழில், அபிவிருத்தி, கல்வியில் தேர்ச்சி மற்றும் சகல செல்வங்களும் பெருகும்.
18, 27, 54, 108, 1008 எண்ணிக்கை உள்ள எலுமிச்சம் பழ மாலையைச் சாற்றுவதால் நமக்கு உண்டாகும் உக்கிரமமான நோய்கள், வயிற்று உபாதைகள் தணிகின்றன. தீராத துன்பங்கள் நீங்குகின்றன.
காமாட்சி மற்றும் துர்க்கை அம்மனுக்கு மாலையாக அணிவிக்கப்படும் சிறப்புடையது எலுமிச்சம்பழம், இதனை குறுக்குவாட்டில் இரண்டாக நறுக்கி சாற்றை பிழிந்துவிட்டு மூடியில் எண்ணெய் அல்லது நெய் விட்டு ஞாயிறு, செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் இராகு காலத்தில் விளக்கேற்றி வந்தால் அம்மனின் அருள் எளிதில் கிடைக்கும் என்பது நம்பிக்கை. கன்னிப்பெண்கள் இவ்வாறு விளக்கேற்றி வந்தால் விரைவில் திருமணம் நடைபெறும் என்பது ஐதீகம்.
எலுமிச்சம் பழங்களை மாலையாகத் தொடுத்து காமாட்சி அம்மனுக்கு அணியும் வழக்கமும் உள்ளது. இவ்வாறு செய்வதால் வேண்டுதல் உடனடியாக நிறைவேறும் என்பது நம்பிக்கை.