மாகாணங்களுக்கு அதிகாரங்களை வழங்கும் பரிந்துரைகளை ஏற்கவில்லை! ஜனாதிபதி

புதிய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்குவதற்கான அரசியலமைப்பு சட்டவாக்க சபையின் உப குழுக்களின் பரிந்துரைகளை ஏற்றுக்கொள்வதில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உலக இலங்கையர் பேரவை என்ற சிங்கள அமைப்பின் பிரதிநிதிகளுடன் கடந்த 22 ஆம் திகதி நடந்த பேச்சுவார்த்தையின் போது ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.

இலங்கை ஒற்றையாட்சி நாடு என அறியப்படும் நிலையில் குறித்த உபகுழுக்கள், இலங்கையை ஐக்கியமான நாடு என பெயரிடுமாறு பரிந்துரைத்துள்ளது. இதன் மூலம் நாடு அழிவை நோக்கி தள்ளப்படக் கூடும் என உலக இலங்கையர் பேரவை அமைப்பு, ஜனாதிபதியிடம் கூறியுள்ளது.

மேலும் இலங்கையை ஐக்கியமான நாடு என பெயரிட்டு, பொலிஸ், காணி அதிகாரங்களை மாகாணங்களுக்கு வழங்குவதன் மூலம் நாடு பிரிந்து செல்லும் ஆபத்து உள்ளது என தாம் ஜனாதிபதியிடம் சுட்டிக்காட்டியதாக உலக இலங்கையர் பேரவையின் ஒருங்கிணைப்பாளர் நுவான் பெல்லந்துடுவ தெரிவித்துள்ளார்.

இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள ஜனாதிபதி உப குழுக்களின் பரிந்துரைகளை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் நிராகரிப்பதாக கூறியுள்ளார்.

உபகுழுக்களின் பரிந்துரைகளை நாடாளுமன்றத்திற்கு அனுப்புவதில்லை எனவும் ஜனாதிபதி கூறியதாக பெல்லாந்துடுவ குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அரசியலமைப்பு சட்டவாக்க சபையின் உபகுழுக்களின் பரிந்துரைகள் குறித்து பிரதமர் ரணில் விக்ரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன், மக்கள் விடுதலை முன்னணி ஆகிய தரப்புடனுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாகவும் பெல்லாந்துடுவ மேலும் தெரிவித்துள்ளார்.