வடக்கில் திட்டமிட்டு அழிக்கப்படும் தமிழ் மக்கள்: ரவிகரன் சாடல்!

முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லை கிராமங்களில் தமிழ் மக்களுடைய நிலங்களை அபகரித்து மேற்கொள்ளப்படும் திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்களை எதிர்க்கும் வடமாகாணசபையானது சிங்கள மக்களை வலுப்படுத்தும் வகையில் உதவி திட்டங்களை ஏன் வழங்குகின்றது? என மாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

வட மாகாணசபையின் 2017ம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தில் மாகாண மீன்பிடி அமைச்சுக்கு ஒதுக்கப்பட்ட நிதி மீதான குழுநிலை விவாதம் நேற்றய தினம்(23) மாகாணசபை பேரவை செயலகத்தின் சபா மண்டபத்தில் நடைபெற்றிருந்தது. இந்த விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் கருத்து தெரிவித்த அவர்

எல்லை கிராமங்களில் தமிழ் மக்களுடைய 3349 ஏக்கர் விவசாய நிலம் அபகரிக்கப்பட்டு திட்டமிட்டவகையில் சிங்கள மக்கள் குடியேற்றப்பட்டுள்ளார்கள்.

அதனை நாம் எதிர்கிறோம். அதே நாங்கள் குடியேற்றப்பட்ட சிங்கள மக்களை வலுப்படுத்தும் வகையில் உதவி திட்டங்களை வழங்குவது எந்த அடிப்படையில் என தெரிவிக்க வேண்டும்.

மீன்பிடி அமைச்சர் புதுக்குடியிருப்பு பிரதேச செயலக எல்லைக்குள் 2 குளங்களிலும், கரைதுறைப்பற்று பிரதேச செயலக எல்லைக்குள் 2 குளங்களிலும் துணுக்காய், மாந்தைகிழக்கு, ஒட்டுசுட்டான் ஆகிய பிரதேச செயலக எல்லைக்குள் தலா ஒவ்வொரு குளங்களிலும் நன்னீர் மீன் களை விட்டுள்ளார். இந்த பகுதியில் சுமார் 40 ஆயிரம் தமிழ் மக்கள் வாழ்கிறார்கள்.

இந்நிலையில் அதே அமைச்சர் திட்டமிட்டு தமிழ் மக்களுடைய நிலத்தையும் குளங்களையும் அபகரித்து குடியேற்றப்பட்ட சிங்கள மக்களுக்காக ஜனகபுர குளம், கலியாணபுர வௌ, சப்மல்வேவ, ஆகிய 3 குளங்களில் மீன்களை விட்டுள்ளார்.

அந்த பகுதியில் வாழ்கின்ற மக்கள் தொகை 3336 இதேபோல் கரைதுறைபற்று பிரதேச செயலக எல்லைக்குள் உள்ள தண்ணிமுறிப்பு குளத்தில் விடப்பட்ட மீன்களிலும் 75 வீதமான மீன்களை குடியேற்றப்பட்ட சிங்கள மக்களே பிடிக்கிறார்கள்.

எனவே குடியேற்றத்தை எதிர்க்கும் நாங்களே அவர்களை வலுப்படுத்தும் வகையில் உதவிகளை வழங்குவது என்ன அடிப்படையில் என எனக்கு புரியவில்லை. இது தொடர்பாக முதலமைச்சர் மற்றும் சமந்தப்பட்ட அமைச்சர் பதிலளிக்கவேண்டும்.

குறிப்பாக நாயாற்று முகத்துவாரம் பகுதியில் தமிழ் மீனவர்கள் தூண்டல்களை பயன்படுத்தி மிகநீண்டகாலமாக கடற்றொழில் செய்து வந்தார்கள். ஆனால் தற்போது அந்த பகுதியில்இருக்கும் படையினர் தமிழ் மீனவர்கள் தூண்டல்களை பயன்படுத்தி கடற்றொழில் செய்ய தடைவிதித்து கொண்டி ருக்கின்றார்கள்.

ஆனால் வேறு மாவட்டங்களை சேர்ந்த மீனவர்கள் தொழில் செய்யஎந்தவொரு தடையும் இல்லை. வெளிமாட்ட மீனவர்களை உடனடியாக வெளியேற்றுவதாக. அதே அமைச்சர் பின்னர் கொழும்புக்கு சென்று வெளிமாட்ட மீனவர்களுக்கு காணியும், வீடும் வழங்கப்படும் என கூறியுள்ளார்.

இரண்டுக்குமான ஆதாரங்கள் என்னிடம் உள்ளது. என மேலும் தெரிவித்தார்.