“இந்த நாட்டு மக்கள் வழங்கிய ஆணைக்கு இணங்க இனி ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படக்கூடாது. மீறி நடத்தப்பட்டால் பலமான வேட்பாளர் ஒருவரை நிறுத்தி நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதி பதவியை கைப்பற்றி அதை ஒழித்துக்கட்டுவோம்.” என ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
அரசின் தற்போதைய நகர்வு தொடர்பில் கருத்துத் தெரிவித்த அவர், இது தொடர்பில் மேலும் தெரிவிக்கும் போது. “2015 ஜனவரி 8ஆம் திகதி நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலானது வரலாற்றுமுக்கியத்துவம் வாய்ந்த ஒரு தேர்தலாகும்.
நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிப்பதற்காக இந்த நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து ஆணை வழங்கிய ஒரு தேர்தலாகும்.
எல்லா ஜனாதிபதித் தேர்தலிலும் இந்த நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிப்பதற்கே மக்கள் வாக்களித்தனர். ஆனால், வெற்றி பெற்றதும் ஜனாதிபதியினர் மக்களின் அந்த ஆணையை மீறி நடந்ததுதான் வரலாறு.
நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிப்பார்கள் என்று நம்பி சந்திரிகாவுக்கும் மஹிந்தவுக்கும் நாம் ஆதரவு வழங்கினோம். ஆனால், அவர்கள் அந்தவாக்குறுதியைக் காப்பாற்றவில்லை.
இறுதியாக மைத்திரிக்கு ஆதரவு வழங்கி அவரை வெற்றிபெற வைத்தோம். நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிப்பதற்கான சில வேலைகளை நாம் செய்தோம்.
வருகின்ற புதிய அரசியலமைப்பின் ஊடாக நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதி முறைமை ஒழிக்கப்பட வேண்டும். இனி ஒரு ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படக்கூடாது. மீறி நடத்தப்பட்டால் அந்தப் பதவியைக் கைப்பற்றி அதை ஒழித்துக் கட்டும் வகையில் நாம் நடவடிக்கை எடுப்போம். பலமான மக்கள் சக்தியின் ஊடாக பலமான வேட்பாளர் ஒருவரை நிறுத்துவோம்” என தெரிவித்துள்ளார்.