தமிழர்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு முன்வைக்கப்படும் அரசியல் தீர்வானது வடக்கையும் தெற்கையும் இணைக்கும் – இன ஒற்றுமையைக் கட்டியெழுப்பக்கூடிய தீர்வாக இருக்க வேண்டுமே தவிர வடக்கு – கிழக்கை இணைக்கும் இனவாதத் தீர்வாக அமையக்கூடாது என ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்தார்.
புதிய அரசமைப்பு தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
“புதிய அரசமைப்புத் தேவை என்பதில் மாற்றுக் கருத்துக் கிடையாது. 1978 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட ஏகாதிபத்திய அரசமைப்பை மாற்றுவதற்கே மக்கள் இந்த அரசுக்கு ஆணை வழங்கினர். அரசமைப்பை மாற்றும் ஒரு பகுதியாகத்தான் 19ஆவது திருத்தச் சட்டம் கொண்டு வரவரப்பட்டது.
19 இற்கு அப்பால் சென்று புதிய அரசமைப்பை விரைவாக கொண்டு வரவேண்டிய தேவை இப்போது உணரப்பட்டு அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. புதிய அரசமைப்பில் தேசிய பிரச்சினைக்கான அரசியல் தீர்வு மற்றும் தேர்தல் முறைமைதான் சிக்கலான விடயங்களாகும்.
அரசியல் தீர்வைப் பொறுத்தவரை அது முழு நாட்டுக்கும் – முழு மக்களுக்கும் ஒரு சிறந்த தீர்வாக அமைய வேண்டும் என்பதே எமது விருப்பமாகும். பிரச்சினையைத் தீர்க்கப் போய் வேறு பிரச்சினைகளை உருவாக்கும் தீர்வாக அது அமைந்துவிடக்கூடாது.
அரசியல் தீர்வில் வடக்கு – கிழக்கு இணைப்பு என்பதை ஒருபோதும் ஏற்க முடியாது. வடக்கு – கிழக்கை இணைப்பதைவிட வடக்கையும் தெற்கையும் இணைப்பதே சிறந்ததாகும். வடக்கு – தெற்கு இணைப்பு என்பது சிங்கள – தமிழ் மக்களை இணைப்பதாகும். அவர்களிடையே நிலையான ஒற்றுமையைக் கட்டி எழுப்புவதாகும்.
இப்படியான ஓர் அரசியல் தீர்வுதான் இந்த நாட்டுக்குத் தேவை. இனங்களிடையே ஒற்றுமையைக் கட்டியெழுப்பாது – அவர்களிடையே இணைப்பை ஏற்படுத்தாது வெறும் இடங்களை மாத்திரம் இணைப்பது இருக்கின்ற பிரச்சினையை மேலும் அதிகரிப்பதாகவே அமையும்” – என்றார்.