இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், இந்திய ‘ஏ’, ஜூனியர் அணிகளின் பயிற்சியாளருமான ராகுல் டிராவிட், இணையதளத்துக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
இந்திய ‘ஏ’ அணியின் வார்ப்பில் இருந்து கருண் நாயர், ஜெயந்த் யாதவ் போன்ற இளம் வீரர்கள் இந்திய அணிக்குள் நுழைந்து சிறப்பாக ஆடுவதை பார்க்க மகிழ்ச்சி அளிக்கிறது. தேசிய அணிக்கு வந்த உடனே இவர்கள் வெற்றிகரமாக செயல்படுவதற்கு, கேப்டன் விராட் கோலியும், தலைமை பயிற்சியாளர் அனில் கும்பிளேவும் உருவாக்கித் தந்த சாதகமான சூழலே காரணம் ஆகும். சவுகரியமான உணர்வுடன் ஆடும் வகையில் தேசிய மட்டத்தில் ஏற்படுத்தப்பட்ட சூழலுக்கு இவர்கள் செலுத்தும் காணிக்கையாக இதை (சிறப்பாக செயல்படுவது) கருதுகிறேன். அதன் முடிவுகளை இன்று நாம் பார்த்து வருகிறோம். இளம் வீரர்களை முன்னெடுத்து செல்லும் இந்த பயணத்தில் நானும் பங்கெடுத்து இருப்பது பெருமை அளிக்கிறது.
இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்டில், கருண் நாயர் முதலில் சதம் அடித்து பிறகு அதையே முச்சதமாக (303 ரன்) மாற்றிய விதம் அற்புதமானது. இந்த ரன் குவிப்பு அவரது திறமையை மட்டும் பேசவில்லை. அவரது வேட்கையையும், ஆர்வத்தையும் காட்டுகிறது. அது தான் மிகவும் முக்கியமான விஷயமாகும். இந்திய கிரிக்கெட் அணியின் தற்போதைய நிலையும், தொடர்ந்து இளம் வீரர்கள் வருவதையும் பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது. கருண் நாயரிடம் அபாரமான திறமை உள்ளது. இங்கிருந்து அவர் பெரிய நிலைக்கு செல்ல வேண்டும்.
நாங்கள் எப்போதும் தேசிய அணிக்கு எதிர்காலத்தில் என்ன தேவையாக இருக்கும் என்பதை கேட்டறிந்தே செயல்படுகிறோம். அவர்களுக்கு ஆல்-ரவுண்டர்கள் தேவை என்றால், ஜூனியர் மட்டத்தில் ஆல்-ரவுண்டர்களை தயார்படுத்துகிறோம்.
19 வயதுக்குட்பட்டோர் மற்றும் இந்திய ‘ஏ’ அணிகளின் ஆட்டங்கள், முடிவுகளை பற்றியது அல்ல. எங்களுக்கு ஆட்டத்தின் முடிவு முக்கியமானது தான் என்றாலும், தேவையான வாய்ப்புகளை அளித்து இளைஞர்களை சிறப்பான முறையில் தயார்படுத்துவது அதை விட முக்கியமான அம்சமாகும். பயிற்சியாளர் பணி வெறும் தரமான வீரர்களை உருவாக்குவது மட்டும் அல்ல. அவர்களுக்கு ஒரு அர்த்தமுள்ள கிரிக்கெட் வாழ்க்கையை பெறச்செய்வதும் குறிக்கோளாகும்.
சில சமயம் இப்படியும் நடக்கலாம். ஜூனியர் அளவில் சரியாக ஆடாத வீரர் இந்திய அணிக்காக ஆடி எதிர்காலத்தில் நட்சத்திர வீரராக மாறலாம். 19 வயதுக்குட்பட்டோர், இந்திய ஏ அணியின் சுற்றுப்பயணங்கள் பல்வேறு வழிகளில் தேசிய அணிக்குள் நுழைவதற்கு அடித்தளமாக இருக்கிறது இவ்வாறு டிராவிட் கூறினார்.