டோனி எனக்கு தந்தை மாதிரி: நெகிழ்கிறார், முகமது ஷமி!

இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி 2013-ம் ஆண்டு இந்திய அணிக்குள் அடியெடுத்து வைத்தார். இதுவரை 22 டெஸ்டில் விளையாடி 76 விக்கெட்டுகளும், 47 ஒரு நாள் போட்டிகளில் ஆடி 87 விக்கெட்டுகளும் வீழ்த்தியுள்ள முகமது ஷமி, உத்தரபிரதேசத்தில் பிறந்து, பெங்கால் அணிக்காக விளையாடி வருபவர். 26 வயதான முகமது ஷமி அளித்த ஒரு பேட்டியில் கூறியிருப்பதாவது:-

இந்திய அணியில் யார் அறிமுகம் ஆனாலும் ஓய்வறைக்கு வரும் போது வீரர்கள் முன்பு பேச வேண்டும். என்னை பேசச்சொன்ன போது, கை, கால் உதறியது. பதற்றமடைந்தேன். நமது அணியில் பெரும்பாலான வீரர்கள் வெளிப்படையானவர்கள். ஜாலியாக பேசி பழகக்கூடியவர்கள். நான் அப்படி இல்லை. கூச்ச சுபாவம் கொண்டவன். எனக்கு ஆங்கிலம் பேசத் தெரியாது, இந்தியில் பேசுகிறேன் என்று கூறி விட்டு சில வார்த்தைகளை பேசினேன்.

அதற்கு மற்ற வீரர்கள், எதில் பேசினால் என்ன, தயக்கமின்றி தைரியமாக பேசுங்கள் என்று என்னை ஊக்கப்படுத்தினார்கள். அது இன்னும் எனது நினைவில் உள்ளது. எனது எண்ணம், செயலை அவர்கள் உடனடியாக ஏற்றுக்கொண்டது வியப்பு அளித்தது

ஒரு நாள் போட்டி அணியின் கேப்டன் டோனி குறித்து கேட்டால் என்ன சொல்வது. அவர் எனக்கு தந்தை மாதிரி. தந்தை-மகன் உறவு போன்றது எங்கள் இடையிலான உறவு.

இவ்வாறு ஷமி கூறியுள்ளார்.